‘‘இலைக்கட்சிக்கு வேறு வழியில் புத்துயிர் ஊட்ட மூன்றெழுத்துகாரர் கால நிர்வாகியை தேடிப் போனா முதலில் இருந்து இனிமே என்னால புரோட்டா சாப்பிட முடியாதுன்னு கலாய்த்து அனுப்பிட்டாராமே…’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சிக்காரங்க, மூன்றெழுத்து தலைவர் காலத்தில் இருந்த நிர்வாகிகளை எல்லாம், இப்போது தேட ஆரம்பிச்சிருக்காங்களாம்.. தேனிக்காரர், சின்னமம்மி, குக்கர்காரரை கட்சிக்குள் இணைக்காமல், வேறு எந்த வழியில் கட்சிக்கு புத்துயிர் ஊட்டலாம் என்ற ஆலோசனை, இப்போ பலமாக போய்க்கிட்டு இருக்காம்..
இதன் ஒரு பகுதியாகவே, மூன்றெழுத்து தலைவர் காலத்து நிர்வாகிகளை சந்திச்சு, மறுபடியும் கட்சிக்குள் வாங்க என்ற அழைப்பாம்.. இதை சேலத்துக்காரரின் ஆலோசனையின் பேரில் செய்ய ஆரம்பிச்சிருக்காங்களாம் நிர்வாகிகள்.. இந்த வகையில், சமீபத்தில் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகி ஒருத்தரை கண்டுபிடிச்சு, நீங்க மறுபடியும் நம்ம கட்சிக்குள்ள வாங்கன்னு அழைப்பு விடுத்தார்களாம்.. அவரோ நான் கடந்த 10 வருஷத்தில் மூணு கட்சிக்கு போயிட்டு வந்துட்டேன்.. அப்போதெல்லாம் என்னை உங்களுக்கு தெரியல.. இப்போ தான் தெரியுதா என்று ஒரு செம கேள்வி கேட்டாராம்..
அப்புறம் மீண்டும் முதலில் இருந்து புரோட்டா சாப்பிட என்னால் முடியாதுனு கலாய்த்து அனுப்பி வச்சாராம் அந்த நிர்வாகி..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘செயல்வீரர் கூட்டம்தோறும் கட்சி பற்றி பேசாமல் சொந்த கருத்தை சொல்லிக்கிட்டு தங்களுக்கு கடிவாளம் போடும் மாஜி அமைச்சர் மீது ரொம்பவே கடுப்பில் இருக்கிறார்களாமே ரத்தத்தின் ரத்தங்கள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்து வருகிறதாம்.. இந்த கூட்டத்தில் மாஜி அமைச்சர் மணியானவர் தான் சிறப்புரையாற்றி வர்றாராம்..
2026 சட்டமன்ற தேர்தலில் இலை கட்சி வெற்றி பெறுவது எப்படி, இதற்காக தொண்டர்கள் எப்படி உழைக்க வேண்டும்னு மணியானவர் பேசுவார் என கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நினைத்து இருந்தார்களாம்… ஆனால், மணியானவர் கட்சியை பற்றியும், உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றியும் எதுவும் பேசாமல் தொடர்ந்து கூட்டத்தில் தனது சொந்த கருத்துகளைதான் பேசி வருகிறாராம்.. முக்கியமாக, கட்சியின் உள்ள நிர்வாகிகள் யாரும் பத்திரிகையாளர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாதுனு அவர்களுக்கு கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்து வருகிறாராம்..
இதனால் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கடந்த தேர்தலில் கரன்சியை கண்ணில் காட்டாததால் குக்கர்காரர் மேல் கடும் அதிருப்பியில் இருக்காங்களாமே கட்சிக்காரங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஹனிபீ மாவட்டத்தில் உள்ள குக்கர் கட்சிக்காரர்கள் கொஞ்சம் பதற்றமாகத்தான் இருக்காங்க.. 2026ம் ஆண்டு வரவுள்ள சட்டமன்றத் தேர்தல் சம்பந்தமாக ஆளுங்கட்சி, இலைக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளன. அதே நேரம் பலாப்பழக்காரரோ, குக்கர் கட்சியினரோ கட்சி பணிகளில் எவ்வித வேகத்தையும் காட்டாமல் அமைதி காத்து வருகிறார்களாம்..
காரணம், ஹனிபீ மாவட்டத்தில் பலாப்பழக்காரரின் 2 எழுத்து தொகுதியை குக்கர் தலைவர் கண் வைத்துள்ளாராம்.. கடந்த எம்பி தேர்தலின்போது, குக்கர் தலைவர் ஹனிபீ தொகுதியில் போட்டியிட்டார். இங்கு போட்டியிட விரும்பிய பலாப்பழக்காரர், வேறுவழியின்றி கடலோர புரம் மாவட்டத்தில் போட்டியிட்டார். ஹனிபீ எம்பி தொகுதியில் குக்கர் தலைவர், வைட்டமின் ‘ப’ வை இறக்குவார் என நம்பி தங்கள் சொந்த பணத்தை அக்கட்சியினரும், பலாப்பழக்காரரின் ஆதரவாளர்களும் வாரி இறைத்தனர்.
ஆனால், குக்கர் தலைவர் கடைசி வரை கரன்சியை கண்ணிலேயே காட்டவில்லையாம்… இதனால் வரும் எம்எல்ஏ தேர்தலில் சொந்த வேலைன்னு எஸ்கேப் ஆகி விடுவோம் என நைசாக இப்போதே அவரது கட்சியினர் கழன்று விட்டனராம்… அதேநேரம் பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள், ‘இவர் இந்த மாவட்ட தொகுதியில் போட்டியிட்டால் தேர்தல் வேலை செய்ய மாட்டோம்’ என கூறி விட்டனராம்.. இதனால் குக்கர்காரர் போட்டியிடுவது குறித்து நீண்ட யோசனையில் ஈடுபட்டுள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனிக்காரர் நடமாட முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என பேசிய உதயமானவர் மேல் அடுக்கடுக்காக புகார்கள் குவியுதாமே தெரியுமா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியின் உதயமான மாஜி அமைச்சருக்கு எதிராக தென் மாவட்டங்களில் புகார்கள் குவிந்துக்கிட்டே இருக்கிறதாம்.. எப்போதுமே வாய் துடுக்காக பேசி சவால் விடும் உதயமானவர், தேனிக்காரர் குறித்து வாய்ஜாலம் பேசினாராம்.. தேனிக்காரர் தமிழகத்தில் எங்கும் நடமாட முடியாத நிலையை உருவாக்குவோம் என்றாராம்..
இதனால் தென் மாவட்டத்தில் தேனிக்காரரின் ஆதரவாளர்கள் கொதித்துப் போனார்களாம்.. ஒரு எம்எல்ஏவாக பதவி வகிப்பவர், அவர் எடுத்துக்கொண்ட அரசியல் அமைப்பு உறுதிமொழிக்கு முரணாக அதனை மீறும் வகையில் பேசி இருக்கிறாரு. சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி தேனிக்காரரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்திருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்காம்..
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் உதயமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அல்வா மாவட்டத்திலும், அருவி மாவட்டத்திலும் கலெக்டரிடமும், எஸ்பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனராம்.. குவியும் புகார்கள் அதிகாரிகளுக்கு தலைவலியாக இருக்கிறதாம்.. இந்த புகார்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம்னு போலீஸ் உயர் அதிகாரிகள் ஒருபக்கம் ஆலோசனை நடத்தி வர்றாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post தேனிக்காரரை மிரட்டிய மாஜி மந்திரி மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.