ஸ்ரீநகர்,
நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி பெருமளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பரூக் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டு கட்சியின் சட்டமன்ற தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கட்சிகளின் கூட்டம் நாளை நடைபெறும் என்றும் அதில் ஆட்சியை அமைக்கும் பணியை மேலும் முன்னெடுத்து செல்லும் பணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.