
சென்னை,
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டதுதான், மருத்துவர் தினம். 'உலக மருத்துவ தினம்' என்று இருந்தாலும், 'தேசிய மருத்துவ தினம்'என்ற ஒன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது நாட்டுக்கு நாடு மாறுபாடு கொண்டதாக இருக்கிறது.
அந்த வகையில் இந்தியாவில் ஜூலை 1-ந் தேதியை, தேசிய மருத்துவர் தினமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். இந்த தினத்தை பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்கள் மட்டுமே கொண்டாடி வருகின்றன. 1991-ம் ஆண்டு முதல் இந்தியாவில் 'தேசிய மருத்துவர் தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
"ளிய பின்புலங்களில் இருந்து வந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி, மக்களின் நலன் காக்கும் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள். தன்னலமற்ற சேவைக்குச் சொந்தக்காரர்களான நமது மருத்துவர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்! அவர்களது சேவைக்கு நமது நன்றியின் அடையாளமாகத் தலைசிறந்த 50 மருத்துவர்களுக்கு இன்று விருதுகள் வழங்கி மகிழ்கிறோம்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.