‘இன்று நம் கைகளில் மழலையாய் தவழும் குழந்தைகள், நாளை நாட்டை வழிநடத்தும் நம்பிக்ைக நட்சத்திரங்கள்,’’ இதை கருத்தில் கொண்டே உலகளவில் குழந்தைகள் மேம்பாட்டுக்கான விழிப்புணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்தவகையில் இன்று (14ம்தேதி) தேசிய குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குழந்தைகள் நலன்சார்ந்த சமூக மேம்பாட்டு அமைப்புகள், பல்வேறு ஆய்வுகள் குறித்த தகவல்களை மக்களிடம் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. உலக மக்கள் தொகையில் குழந்தைகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக உள்ளது. ஆனால் தீவிர ஏழைகளில் பாதிபேர் குழந்தைகள் என்கிறது உலகளாவிய ஆய்வுகள். பெரியவர்களை விட குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருக்கின்றனர்.
ஏழ்மையில் தவிக்கும் குழந்தைகளின் சராசரி 17.5 சதவீதம் என்றும், ஏழ்மையில் சிக்கியுள்ள பெரியவர்களின் சராசரி 7.9 சதவீதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. வளரும் நாடுகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் வாழ்கின்றனர். இதில் பலவீனமான மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் குழந்தைகளின் வறுமை அதிகமாக உள்ளது. அங்கு 40 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் வறுமையான குடும்பங்களில் வாழ்கின்றனர். கடுமையான வறுமையில் உள்ள குழந்தைகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயம் சார்ந்த கூலிப்பணிகளில் ஈடுபடும் குடும்பத்தலைவரை கொண்ட வீடுகளில் வசிக்கின்றனர் என்றும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 77.40 கோடி குழந்தைகள் வறுமையாலும், பருவநிலை நிகழ்வுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக கம்போடியாவில் 72 சதவீத குழந்தைகளும், மியான்மரில் 64 சதவீத குழந்ைதகளும், ஆப்கானிஸ்தானில் 57சதவீத குழந்தைகளும் வறுமை, பருவநிலை அச்சுறுத்தல்களை அதிகளவில் சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 51 சதவீதம்ேபர் அதாவது 22.20 கோடி குழந்தைகள் வறுமையிலும், பருவநிலை மாற்றங்களின் பிடியிலும் சிக்கியுள்ளனர். இதில் 35.19 கோடி குழந்தைகள் ஆண்டு தோறும் ஏதாவது ஒரு பருவநிலை மாற்ற நிகழ்வால் பாதிக்கப்படுகின்றனர். கேரளா, அசாம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கும், ஒடிசாவில் வீசும் புயலும் எண்ணற்ற குழந்தைகளை வறுமையின் பிடியில் தள்ளுவதற்கு வழிவகுத்திருக்கிறது என்பதும் குழந்தைகள் நலமேம்பாட்டு அமைப்புகள் கூறும் தகவல்.
இது குறித்து குழந்தைகள் நலன்சார்ந்த மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: உலகளாவிய ஆய்வுகளில் வறுமை என்பது குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது. இது அவர்களின் உரிமையை பறிக்கிறது. வறுமையால் முதலில் அவர்களின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தின் பாரம் சுமக்க அவர்கள், குழந்ைத தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர். இதனால் அவர்களின் கல்வி பறிபோகிறது. இந்த கல்வி பறிபோவதால் சிந்திக்கும் திறன், உலகை புரிந்து கொள்வதற்கான சூழல்கள் முடங்குகிறது. இப்படியே வளரும் குழந்தை, இலக்குகள் எதுவும் இல்லாத மனிதராகவே இந்த சமூகத்தில் உருவாகிறார். அல்லது நம்மால் எதுவும் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை அவரிடம் தொற்றிக் கொள்கிறது.
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் சமூகத்தின் உந்துதலால் குடும்பத்தலைவராக மாறுகிறார். ஆனால் அவரது அடுத்தடுத்த தலைமுறைகளையும் தன்னைப்போல் வழிநடத்திச் செல்லும் மனப்பாங்கே அவரிடம் அதிகரிக்கும். இந்தவகையில் சமூக கட்டமைப்பில் ஒரு குழந்தையின் வறுமை என்பது நாட்டின் நாளைய வளர்ச்சிக்கு தடைபோடும் அபாய அஸ்திரமாகவே உள்ளது. எனவே குழந்தைகளின் வறுமையை எதிர்த்து போராடுவதற்கும், குழந்தைகள் செழிப்பதை உறுதி செய்வதற்கும் நிரூபிக்கப்பட்ட மற்றும் செலவு குறைந்த வழியை வழங்கும் குழந்தை நலன்களில் முதலீடு செய்ய வேண்டும். இலவசமாகவோ அல்லது மலிவு விலையிலோ உயர்தர குழந்தை பராமரிப்பு மற்றும் முக்கியமான சுகாதாரங்கள் மிகவும் அவசியம்.
இதனை தேசிய சமூகபாதுகாப்பு அமைப்புகள் மூலம் விரிவான அளவில் குழந்ைதகளுக்கு வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்களுக்கு உரிமைகள் அடிப்படையிலான பாலினம் சார்ந்த சமூக பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும். உள்நாட்டு வளங்களை திரட்டுவதன் மூலமும், குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்ைட அதிகரிப்பதன் மூலமும் சமூக பாதுகாப்பு அமைப்புகளுக்கு போதுமான நிலையான நிதியை வழங்கவேண்டும். இதன்மூலம் வறுமையில் வாடும் குழந்தைகளின் நிலை தடுக்கப்படும் வாய்ப்புள்ளது.இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
10 ஆண்டுகளில் 15% அதிகரிப்பு
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி சமூக பாதுகாப்பு கிடைக்காத குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு உலகளாவிய சமூக பாதுகாப்பை உருவாக்குவதற்கான அவசரத்தேவை உள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு பிராந்தியத்திலும் குழந்தை பாதுகாப்பு மற்றும் குடும்பநலன் பாதுகாப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வருகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு போதுமான சமூக பாதுகாப்பை வழங்கத் தவறினால் அவர்கள் வறுமை, ேநாய், தவறிய கல்வி மற்றும் ேமாசமான ஊட்டச்சத்து ஆகியவற்றால் பாதிக்கப்படுவர். கல்வி, சுகாதாரம், வீடு, ஊட்டச்சத்து இல்லாமல் வறுமையில் வாடும் குழந்தைகள், கடந்த 10 ஆண்டுகளில் 15 சதவீதம் அதிகரித்துள்ளனர். எனவே குழந்தைகளுக்கு நட்பான சமூகப்பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் அவசரத்தேவை உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு வளர வேண்டும்
பிறந்தது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் குழந்தைகள் என்ற பட்டியலில் உள்ளனர். இதன்படி குழந்தைகளுக்கான அனைத்து உரிமைகளையும் கொடுத்து, அவர்களின் பாதுகாப்புக்கு வழிசெய்ய வேண்டும் என்று உலகளவிலும், இந்தியாவிலும் பல்வேறு சட்டங்கள் உள்ளன. இதேபோல் குடும்ப பாதுகாப்பு இல்லாமல் ஆதரவற்ற நிலையில் விடப்படும் குழந்தைகளை கருத்தில் கொண்டும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவற்றை முறையாக செயல்படுத்தும் வகையில் இளைஞர் நீதிச்சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. அதேபோல் குழந்தைகளின் பின்னணியை ஆய்வு செய்து, அவர்களுக்கு என்ன தேவையோ, அதைச் செய்து கொடுக்கும் வகையில் குழந்தைகள் நலக்குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த விழிப்புணர்வு என்பது போதிய அளவில் இல்லாததும், குழந்தைகள் சிரமத்தில் தத்தளிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
The post தேசிய குழந்தைகள் தினத்தில் ஓர் விழிப்புணர்வு; இந்தியாவில் வறுமையில் சிக்கி பாதிக்கப்படும் 51% குழந்தைகள்: தலைமுறைகள் தடுமாற வழி வகுக்கிறது என ஆதங்கம் appeared first on Dinakaran.