தேசிய கிரிக்கெட் அகடமிக்கு பெங்களூருவில் சிறப்பு மையம்

2 months ago 14

பெங்களூருவில் இயங்கி வரும் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு (என்சிஏ), அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு மையத்தை (சென்டர் ஆப் எக்சலன்ஸ்) பிசிசிஐ தொடங்கியுள்ளது. இதற்காக கர்நாடக அரசிடம் இருந்து 16 ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை வாங்கியிருந்த கிரிக்கெட் வாரியம், 2022ல் கட்டுமானத்தை தொடங்கிய நிலையில் தற்போது பணிகள் பூர்த்தியடைந்து தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இதில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலர் ஜெய் ஷா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறப்பு மையத்தில் 3 மைதானங்கள், ஒரு உள்ளரங்கம், பயிற்சிக்காக திறந்த வெளியில் 45 ஆடுகளங்கள், அதிநவீன பயிற்சி வசதிகள், விளையாட்டு அறிவியல், காயம் அடையும் வீரர்கள் முழு உடல்தகுதி பெறுவதற்கான சிகிச்சை வசதிகள், தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடிய வளாகத்தில் இயங்கி வரும் என்சிஏ அடுத்த ஆண்டில் முழுமையாக இங்கு இடம் பெயர உள்ளது.

பிரதான மைதானத்தில் நவீன மின்னொளி கோபுரங்கள், மழைநீர் வடிகால் வசதி, ஒலி/ஒளிபரப்பு வசதிகள், 13 செம்மண் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு இந்தியா ஏ அணி விளையாடும் போட்டிகள் மற்றும் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளும் நடத்தப்படும். பி, சி மைதானங்கள் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

உள்ளரங்கு/ திறந்தவெளி தடகள மைதானம், நீச்சல் குளமும் உள்ளது. ‘இந்த சிறப்பு மையம் எதிர்கால வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல, நடப்பு தலைமுறையினருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். வீரர்கள் தங்கள் உடல்தகுதி மற்றும் ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொள்ள உதவும்’ என்று என்சிஏ தலைவர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

The post தேசிய கிரிக்கெட் அகடமிக்கு பெங்களூருவில் சிறப்பு மையம் appeared first on Dinakaran.

Read Entire Article