வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் தனித்தன்மை ஆகும். வெவ்வேறு பண்பாடுகளைக் கொண்ட வெவ்வேறு மொழி பேசுகின்ற வெவ்வேறு மாநிலங்களில் வாழும் மக்களை இந்தியா என்ற ஒற்றைக் குடைக்குள் கொண்டுவந்து ஒன்றிணைத்த பெருமை இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களையே சாரும். அவர் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆம் நாள் தேசிய ஒற்றுமை தினமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்தார் வல்லபாய் படேல் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி குஜராத்தில் உள்ள நாடியாட் கிராமத்தில் பிறந்தார். அவரது முழுப்பெயர் வல்லபாய் ஜாவர்பாய் படேல் ஆகும். இருப்பினும் சர்தார் படேல் என்றே பிரபலமாக அறியப்படுகிறார்.
சர்தார் படேலின் தந்தை, ஜாவர்பாய் படேல், ஜான்சி ராணியின் ராணுவத்தில் பணியாற்றியவர். தாய் லட்பாய் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். சிறுவயதில் இருந்தே படேல் மிகவும் தைரியமான குணம் கொண்டவர். சிறுவயது முதலே படிப்பில் சிறந்த மாணவராக விளங்கினார். வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அவர், தனது 25 வயதில் ‘டிஸ்ட்ரிக்ட் பிளீடர்’ படிப்பை முடித்து கோத்ராவில் வழக்கறிஞராகத் தொழில் செய்யத் தொடங்கினார். பின்னர் 1910ஆம் ஆண்டு லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் படித்து முதல் மாணவராகத் தேர்வானார். பிறகு நாடு திரும்பிய அவர் அகமதாபாத்தில் வழக்கறிஞராகப் பணிபுரியத் தொடங்கினார்.
அகமதாபாத்தில் வழக்கறிஞர் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்னைகளுக்காக போராடி, அவர்களின் இதயங்களில் இடம் பிடித்தார். 1917ஆம் ஆண்டு முதன்முறையாக மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரம், வடிகால் மற்றும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தினார். ஆசிரியர்களின் அங்கீகாரம் மற்றும் ஊதியத்திற்காகப் போராடினார்.
குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம் ஏற்பட்டு ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அதன் விளைவாக அரசு பணிந்து வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது.
1920ஆம் ஆண்டில், புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார் .1931இல் காங்கிரஸில் ‘அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதாரக் கொள்கை’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவே வரலாற்றுச் சிறப்பு மிக்க கராச்சி தீர்மானம் எனப்பட்டது.
காந்தியடிகள் தண்டி உப்புச் சத்தியாகிரகத்தை மேற்கொண்டபோது , படேல் ராஸ் கிராமத்தில் கைது செய்யப்பட்டு சாட்சிகள் இல்லாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வழக்கறிஞர் அல்லது பத்திரிகையாளர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. படேல் கைதும், காந்தியின் கைதும் குஜராத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது.
சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது மகாத்மா காந்தியின் உரையைக் கேட்ட அவர், வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டுத் தன்னை சுதேசி இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். அடுத்து கேடா, பார்டோலி உள்ளிட்ட இடங்களில் மக்களுக்காகப் போராட்டம் நடத்திய படேலுக்கு போராட்டங்களும், சிறைவாசமும் வாடிக்கையாகிப் போனது.
படேல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்தார் மற்றும் 3,00,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அகமதாபாத்தில் பிரிட்டிஷ் பொருட்கள் எரிப்பதற்கு உதவி செய்ததோடு, தனது அனைத்து ஆங்கிலப் பாணி ஆடைகளையும் எரித்தார். அவரது மகள் மணி மற்றும் மகன் தஹ்யாவுடன், அவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கதராடையை அணியத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து காந்தியடிகள் நடத்திய பல போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
படேல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது வட்டமேஜை மாநாட்டுத் தோல்விக்குப் பிறகு மகாத்மா காந்தி, படேல் கைது செய்யப்பட்டு, எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முதல் காந்தியுடன் படேலுக்கு நெருக்கம் ஏற்பட்டது. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராக இருந்தார். அப்போதுதான் 565 சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அதனால்தான் அவருக்கு ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று பெயர் கிடைத்தது.
முகமது அலி ஜின்னா தலைமையில் இஸ்லாமிய பிரிவினைவாத இயக்கத்திற்குத் தீர்வாக இந்தியப் பிரிவினையை ஏற்றுக்கொண்ட முதல் காங்கிரஸ் தலைவர்களில் வல்லபாய் படேல் ஒருவர். பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளை ஒரு முஸ்லீம் மாநிலத்தில் சேர்க்க வேண்டும் என்ற ஜின்னாவின் கோரிக்கையைக் கடுமையாக விமர்சித்த படேல், அவை பாகிஸ்தானில் சேர்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்தினார்.
நவம்பர் 1948இல் நாக்பூர், அலகாபாத், பனாரஸ் பல்கலைக்கழகங்கள் படேலுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின. படேல் உடல்நலம் குன்றி மாரடைப்பால் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் நாள் பம்பாயில் உள்ள பிர்லா ஹவுஸில் இறந்தார். படேலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு வாரம் தேசிய துக்கத்தை அறிவித்தார்.
படேலுக்கு 1991இல் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா விருது மரணத்திற்குப்பின் வழங்கப்பட்டது. 2014இல் அவரது பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் நாள் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2012இல் அவுட்லுக் நடத்திய இந்தியாவின் சிறந்த இந்தியர் என்ற வாக்கெடுப்பில் படேல் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கும், அகமதாபாத்தின் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கும் அவரது பெயர் வைக்கப்பபட்டது. குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் சர்தார் வல்லபாய் படேலுக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. 597 அடி உயரத்தில் அமைந்துள்ள இது உலகின் மிக உயரமான சிலை ஆகும். அவரது பிறந்த நாளில் ஒற்றுமைக்கான உறுதிமொழி ஏற்போம். அவரின் பணிகளை நினைவு கூர்வோம்.
The post தேசிய ஒற்றுமை தின நாயகர் சர்தார் வல்லபாய் படேல் appeared first on Dinakaran.