தென்னிந்தியாவின் மிக முக்கியமான மாநிலமான தமிழ்நாடு, வளமான விவசாயப் பாரம்பரியத்தை கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது. இம்மாநிலத்தின் பரப்பளவு 1.30 லட்சம் சதுர கிலோமீட்டர். இது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் நான்கு சதவீதம் ஆகும். சாதகமான தட்பவெப்ப நிலை, நன்கு வளர்ந்த நீர்ப்பாசன உட்கட்டமைப்பு, நீண்டகால விவசாயப் பாரம்பரியம் ஆகியவற்றால் வலுவான விவசாயம் மேற்கொள்ள ஏதுவாக உள்ளது. தமிழக தட்பவெப்பநிலையானது வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் பல வகையான பயிர்களை பயிரிட ஏதுவாக உள்ளது.
அரிசி, கரும்பு, தென்னை, வாழை, நிலக்கடலை, பருத்தி, மசாலாப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடி இங்கு சிறப்பான அளவில் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழ்நாட்டின் விவசாயம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் தென்னிந்தியாவின் தானியக்களஞ்சியம் என குறிப்பிடப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் 7.10 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்தியாவின் உணவு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்காகத் திகழ்கிறது.
துல்லியமான விவசாயத்தை ஊக்குவிப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. இது தண்ணீர் பயன்பாடு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. துல்லிய விவசாயம் அதிகமான மகசூல் மற்றும் தரமான உற்பத்திக்கு வழிவகுக்கிறது. குறைந்த நீர்வளத்துடன் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன முறைகளையும் பயன்படுத்தி தண்ணீர் வளத்தைப் பாதுகாத்து, உற்பத்தித் திறனையும் அதிகரித்து நிலையான விவசாய நடைமுறைக்கு வழிவகுக்கிறது.
தமிழகத்தின் கால்நடைத்துறை விவசாய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு ஆற்றுகிறது. பால் உற்பத்தியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு, ஆவின் போன்ற அமைப்புகளால் ஆண்டுதோறும் சுமார் 7.7 மில்லியன் டன் பாலை உற்பத்தி செய்து பால் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.
நாமக்கல் கோழிப் பண்ணைகள் நாட்டின் முட்டை உற்பத்தி மையமாக விளங்குகிறது. மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களில் கவனம் செலுத்தி ஏற்றுமதியிலும் முன்னிலை வைக்கிறது. மசாலா பொருட்கள், காபி, தேயிலை, வாழைப்பழங்கள், தேங்காய், மல்லிகை, ரோஜாப்பூ போன்றவை சர்வதேச சந்தைகளைச் சென்றடைந்து உலகளாவிய வர்த்தகத்திலும் இந்தியா கோலோச்சுகிறது. மேலும் டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் பிற நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு எந்திரமயமாக்கல் செயல்திறனை மேம்படுத்தி உற்பத்தித் திறனை மென்மேலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
தமிழக அரசு விவசாயத்தைப் பாதுகாக்கவும், அதை மேம்படுத்தவும் பல்வேறு கொள்கைத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. விதைகள், உரங்கள் மற்றும் நீர்ப்பாசன உபகரணங்களுக்கான மானியங்கள், சிறுகுறு விவசாயிகளுக்கு பயனளிக்கும் ஒருங்கிணைந்த வேளாண் நடைமுறைகளை அது செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான முக்கியத்தலமாக திகழ்கிறது. அது நவீன தொழில்நுட்பங்கள் குறித்த அறிவை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. ஆயினும் தமிழ்நாட்டின் விவசாயத்துறை தண்ணீர் பற்றாக்குறை, பருவமழை மாறுபாடு, மாநிலங்கள் இடையேயான தண்ணீர் பிரச்னை, காலநிலை மாற்றம், ஒழுங்கற்ற மழைப்பொழிவு, நகரமயமாக்கல் போன்ற பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது.
நுண்ணீர் பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு நடைமுறைகளை விரிவுபடுத்தல், காலநிலையை எதிர்கொள்ளும் நிலையான விவசாய தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல், விவசாய ஏற்றுமதி உட்பட்டமைப்பை வலுப்படுத்துதல், மதிப்புக்கூட்டல், விவசாய தொழில் முனைவு முயற்சியில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் போன்ற உத்திகளை மேம்படுத்துவதன் மூலம் சவால்களை எதிர்கொண்டு நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் விவசாய பொருளாதாரம் தனது வெற்றிப் பயணத்தை தொடரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
– பொறியாளர் சுரேஷ் கோபாலகிருஷ்ணன்
அறிவியல் செயற்பாட்டாளர்.
The post தேசத்தின் வளர்ச்சியில் தமிழக விவசாயத்தின் பங்களிப்பு! appeared first on Dinakaran.