புதுடெல்லி,
நடப்பு ஆண்டுக்கான ராணுவ தளபதிகள் மாநாடு 2 கட்டங்களாக நடந்து வருகிறது. இதன்படி, கேங்டாக் நகரில் கடந்த 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் முதல்கட்ட மாநாடு நடந்தது. இதில், டார்ஜிலிங் நகரில் உள்ள சுக்னா கன்டோன்மெண்ட்டில் இருந்தபடி காணொலி காட்சி வழியே மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
இதில், எல்லை பாதுகாப்பு தொடர்புடைய சவால்கள் மற்றும் ஆலோசனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. இதன் 2-வது கட்ட மாநாடு நேற்றும், இன்றும் டெல்லியில் நடக்கும் என அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இந்த 2-வது கட்ட மாநாட்டில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதுபற்றிய சில புகைப்படங்களை அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், டெல்லியில் ராணுவ தளபதிகள் மாநாட்டில் இன்று உரையாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடப்பு புவிஅரசியலில் உள்ள நுணுக்கங்கள், அதன் சவால்கள், சாத்தியங்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டன.
ஒட்டுமொத்த அரசு அமைப்பு அணுகுமுறையானது, தேச பாதுகாப்பை திறம்பட முன்னெடுத்து செல்வதற்கான தேவையாக உள்ளது என்று வலியுறுத்தினேன் என தெரிவித்து உள்ளார். இதன்படி, அரசின் பல்வேறு அமைப்புகள், அமைச்சகங்கள், பொது நிர்வாகங்கள் என பல்வேறு மட்டத்தில் இணைந்து பணியாற்றும் அணுகுமுறை தேவையான ஒன்றாக உள்ளது என அவர் தெரிவித்திருக்கிறார்.