*முதல்வர் ரேவந்த் ரெட்டி பரபரப்பு பேச்சு
திருமலை : திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக தெலங்கானா மக்கள் பிரதிநிதிகள் ஆந்திர அதிகாரிகளிடம் பிச்சை எடுப்பது அவசியமா? என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி பரபரப்பாக பேசினார்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ரவீந்திர பாரதியில் அரசு சார்பில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று பேசியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு தெலங்கானா மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதங்களை ஏற்க வேண்டும் என ஒவ்வொரு முறையும் தேவஸ்தான அதிகாரிகளிடமும். ஆந்திர அரசிடமும் கேட்பதில் என்ன பயன்? வாரத்தில் இரண்டு நாட்கள் என அவர்கள் கொடுக்கும் பிச்சை எதற்கு. ஆந்திராவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இருந்தால், தெலங்கானாவில் யாதகிரிகுட்டா தேவஸ்தானம் இல்லையா?
பத்ராசலத்தில் ராமர் கோயில் இல்லையா? மாநிலத்தில் சிவன் கோயில்கள் எண்ணிக்கை என்ன குறைவாகவா உள்ளது.அற்புதமான கலாச்சார பாரம்பரியம் கொண்ட தெலங்கானாவில் உள்ள கோயில்களை விட்டு திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய பிச்சை எடுப்பதற்குப் பதிலாக, தெலங்கானாவில் உள்ள கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் திருமலைக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அதே நாளில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்த இந்தக் கருத்துக்கள் பரபரப்பாக பேசப்படுகிறது.
The post தெலங்கானா மக்கள் பிரதிநிதிகள் ஏழுமலையான் தரிசனத்துக்காக பிச்சை எடுப்பது அவசியமா? appeared first on Dinakaran.