ஜெருசலேம்,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகருக்கு அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த பள்ளியில் போரால் வீடுகளை இழந்த பாலஸ்தீன மக்கள் முகாமிட்டு தங்கியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண முகமை என கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்ததாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதேபோல, இஸ்ரேலிய ராணுவம் வடக்கு காசா பகுதியில் நடத்திய தாக்குதலில் பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்ததாக கூறப்படுகிறது.