தென்மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயில்: குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதல்

19 hours ago 1


நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக வெயில் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் குளிர்பான கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவழை பெய்து வந்தது. இதனால் பகல், இரவு நேரங்களில் குளிர்ச்சி நிலவி வந்தது. தற்போது நள்ளிரவு முதல் அதிகாலை வரை அதிக பனிபொழிவு காணப்படுகிறது. ஆனால் பகலில் கடும் வெயில் வாட்டத் துவங்கி விட்டது. தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் துவங்கும். ஆனால் சமீபகாலமாக பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் கடுமை அதிகரிக்கத் துவங்கி விடுகிறது. காலை 10 மணி முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் அனல்காற்று வீசுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தென் மாவட்டங்களில் பகல் நேரங்களில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் போது வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள குடைகளை பயன்படுத்தி வருகின்றனர். கல்லூரி மாணவிகள், அலுவலகத்துக்கு செல்லும் பெண்கள் வெய்யிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகங்களில் முகத்தையும், கைகளையும் மூடி இரு சக்கர வாகனத்தில் பயணித்து வருவதை காணமுடிகிறது. நெல்லையில் நேற்று 97 டிகிரி வெயில் அடித்தது. வெயில் கொளுத்துவதால் சாலைகளில் கானல் நீர் காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் பலர் வெயிலின் தாக்கத்தால் நிழல் தரும்மரங்களை தேடி வாகனங்களை நிறுத்தி சற்று இளைப்பாறி சென்றதை காணமுடிந்தது. நெல்லை மாநகர பகுதிகளான நெல்லை சந்திப்பு, டவுன், பாளை பஸ்நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர்பான கடைகள், பதனீர், நுங்கு, கரும்புச்சாறு, பழச்சாறு கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது.

பொதுமக்களும் செல்லும் இடங்களில் குளிர்பான கடைகளை தேடிச்சென்று பழச்சாறு, கரும்புசாறு, இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசனி உள்ளிட்ட தண்ணீர் சத்துக்கள் அதிகம் காணப்படும் பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதுபோல் கம்பு, கேப்பை, சோளம் உள்ளிட்ட கூழ் கடைகளிலும் மோருடன், வெங்காயம் கலந்த கூழ்வாங்கி பருகி வருகின்றனர். இதுகுறித்து நெல்லையைச் சேர்ந்த டாக்டர் ஜெய ஸ்ரீராம் கூறியதாவது: வெயில் காலங்களில், முடிந்தவரை, தினமும் இரண்டு வேளை குளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். காற்றோட்டம் அதிகமுள்ள பகுதியில் இருக்க வேண்டும். குழந்தைகளை வெயிலில் விளையாட விடக் கூடாது. வியர்வை அதிகம் வெளியேறும் போது, உப்பு சக்தி குறைகிறது. தசை பிடிப்பு, மயக்கம், ரத்தநாளம் விரிவடைந்து, மூளைக்கு ரத்தம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, பாதிப்பு, வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்லுதல் அவசியம். ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை குடிப்பது நல்லது. வெப்பத்தை ஈர்க்கும், கருப்பு, கருநீலம் உள்ளிட்ட நிற உடைகளை அணியாமல், வெள்ளை, மஞ்சள், இளம்பச்சை நிற உடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும். நடந்தும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் போதும், நேரடியாக தலையில் வெப்பம் இறங்காமல் பாதுகாக்கும் வகையில், தொப்பி, ெஹல்மெட் அணிந்து கொள்ள வேண்டும். கண் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கூலிங்கிளாஸ் அணியலாம். எண்ணெய், காரம், இறைச்சி உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். முதியவர்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ள காலை, 11:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை வெளியே செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

The post தென்மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயில்: குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article