தென்னையைத் தாக்கும் பூச்சிகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளும்!

1 week ago 3

*தென்னையில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தும் கூன்வண்டினைக் கட்டுப்படுத்த கீழ்க்காணும் வழிவகைகள் நன்கு கைகொடுக்கும்.
*மரங்களின் நுனிப்பகுதியை தேவையான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்.
*கூன்வண்டினால் தாக்கப்பட்டு இறந்த மரங்களை உடனே வெட்டி அப்புறப்படுத்தி எரித்துவிட வேண்டும். இதனால் கூன் வண்டுகள் மீண்டும் பரவுவதைத் தடுக்கலாம்.
*மரங்களின் தண்டுப்பகுதியில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுதல் மிக முக்கியம். மேலும் துவாரங்கள் இருப்பின் அவற்றை சிமெண்ட் அல்லது களிமண் பூசி அடைத்துவிடுதல் வேண்டும்.
*மரங்களின் தண்டுப்பகுதியின் மீது படிக்கட்டு போன்ற அமைப்பை செதுக்கக்கூடாது.
*பச்சை மட்டைகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வெட்டுவதாயின் தண்டிலிருந்து
120 செமீ தள்ளி வெட்ட வேண்டும்.
*நுனி நடுக்குருத்து மற்றும் இலை மட்டை இடுக்குகளில் போரேட் (அ) வேப்பங்கொட்டைத் தூள் 5 கிராம் கொண்ட (துளையுடன் கூடிய) 2 பாக்கெட்டுகள் வைப்பதால் காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிவப்புக் கூன்வண்டு முட்டையிடுவதைத் தடுக்கலாம்.
*இலை இடுக்குகளில் செவிடால் 25 கிராம் + மணல் 20 கிராம் கலந்த கலவையைப் போடவும்.
*இலை இடுக்குகளில் மூன்று பூச்சி உருண்டைகளை இரண்டு (துளையுடன் உள்ள) பாக்கெட்டுகளில் வைக்கவும்.
*துளைகளின் மூலம் 5 மிலி மோனோகுரோட்டோபாஸ் + 5 மிலி டைகுளோர்வாஸ் மருந்தைச் செலுத்தவும்.
*வேர்மூலம் 1 மிலி மோனோகுரோட்டோபாஸ் மருந்தை 10 மிலி தண்ணீரில் கலந்து 45 நாட்கள் இடைவெளியில் மூன்று தடவை தொடர்ந்து செலுத்தவும். வேர் மூலம் மருந்து செலுத்துவதற்கு முன் காய்களை அறுவடை செய்துவிட வேண்டும். மருந்து செலுத்திய பின் 45 நாட்கள் கழித்துத்தான் அறுவடை செய்ய வேண்டும்.
* குருத்தழுகல், இலையழுகல் மற்றும் காண்டாமிருக வண்டுகளால் தாக்கப்பட்ட மரங்கள் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாவதால், அந்த மரங்களை முதலில் பூஞ்சாணக் கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
*கரும்புச் சாறு (கரும்புக் கோழை) 2.5 கிலோ + ஈஸ்ட் மாத்திரை 5 கிராம் + அசிட்டிக் அமிலம் 5 மிலி, நீளவாக்கில் வெட்டப்பட்ட இலை மட்டை துண்டுகள் ஆகியவை போடப்பட்ட பானைகளை ஏக்கருக்கு 30 வீதம் தென்னந்தோப்பில் வைத்து கூன் வண்டுகளைக் கவரச்செய்து அழிக்கலாம்.
* கூன் வண்டு தாக்கிய ஒவ்வொரு மரத்தின் துவாரத்திலும் மூன்று கிராம் எடை உடைய இரண்டு அலுமினியம் பாஸ்பைடு மாத்திரைகளைப் போட்டு, துளையினை பைட்டோலான் கலந்த களிமண்ணால் மூடவேண்டும்.
*பொரோலுயிர் (அல்லது) சி.பி.சி.ஆர்.ஐ லுயிர் என்ற கவர்ச்சிப் பொறிகளை ஒரு ஹெக்டேருக்கு ஒன்று என்ற வீதத்தில் வைத்தும் சிவப்புக் கூன்வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

கருந்தலைப் புழு

தென்னையைத் தாக்கும் பல முக்கிய பூச்சிகளில் கருந்தலைப்புழு மிக முக்கியமானதாகும். இந்தியாவில் கடற்கரையைச் சார்ந்து இருக்கின்ற நிலப்பரப்புகள், உப்பங்கழி பகுதிகள், ஆற்றுப்படுகை ஓரங்களில் உள்ள பகுதிகள் மற்றும் நாட்டின் உட்பகுதியில் உள்ள தென்னை மரங்களை இந்தக் கருந்தலைப்புழு அதிகளவில் தாக்குகிறது.

தாக்குதலின் அறிகுறிகள்

தீவிர தாக்குதலின்போது பழைய இலை மட்டைகள் முழுவதும் காய்ந்து பழுப்பு நிறமாகவும் 3 (அ) 4 இளம் இலை மட்டைகள் மட்டும் நடு அடுக்கில் பச்சையாக தென்படும். இந்தத் தீவிர தாக்குதலின் தொடர்ச்சியாக இலை மட்டைகளின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்துவிடும். தாக்கப்பட்ட இலைகளின் அடிப்பாகத்தில் பச்சையம் சுரண்டப்பட்ட நூலாம்படையில் புழுக்கள் மறைந்து இருக்கும். இந்தப் புழுக்கள் பாரன்கைமேட்ஸ் செல்களைக் கொண்ட பச்சையத்தை மிக வேகமாக சுரண்டித் தின்னும். இதனால் ஒளிச்சேர்க்கை நடக்கக்கூடிய பகுதிகள் குறைந்து தேங்காய் மகசூல் குறையும். அதிகளவில் தாக்குதலுக்கு உள்ளான மரங்கள், தூரத்தில் இருந்து பார்க்கும்பொழுது தீயினால் கருகிய இலைகள் போன்று காணப்படும். எல்லா வயதுடைய தென்னை மரங்களிலும் கருந்தலைப் புழுக்களின் தாக்குதலைக் காணலாம்

ஒருங்கிணைந்த கட்டுப்பாடு

*கருந்தலைப்புழுக்களால் தாக்கப்பட்டு கீழ் அடுக்குகளில் அதிகளவில் சேதமடைந்து காய்ந்து போன இலைகளை (2-3) வெட்டி அப்புறப்படுத்தி தீயிட்டு எரிக்க வேண்டும்.
*தாக்குதல் பரவி இருக்கும்போது டைகுளோர்வாஸ் 0.02%, மாலத்தியான் (அ) என்டோசல்பான் (அ) குயின்னால்பாஸ் (அ) பாசலோன் 0.05% ஆகிய மருந்துகளில் ஏதாவது ஒன்றினை, தாக்கப்பட்ட இலைகளின் அடிப்பாகங்களில் உள்ள நூலாம்படைகளின் மீது நன்கு படும்படி தெளிக்கவும்.
*மிக அதிகளவில் தாக்குதல் பரவி இருக்கும்போது 10 மிலி மானோகுரோட்டோபாஸ் + 10 மிலி தண்ணீர் என்ற அளவில் சிவப்பு நிறமுள்ள வேர் மூலம் தாக்கப்பட்ட மரங்களுக்கு செலுத்தவும். தேங்காய் அறுவடையை, மருந்து செலுத்தப்படுவதற்கு முன்போ அல்லது 45 நாட்கள் கழித்த பிறகோ செய்யவும்.
– முனைவர்: ப.குமாரவடிவேலு, மா.சகாதேவன்.
இந்திய வேளாண்மை
ஆராய்ச்சிக் கழகம், கோயம்புத்தூர்.

The post தென்னையைத் தாக்கும் பூச்சிகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளும்! appeared first on Dinakaran.

Read Entire Article