தென்னங்கன்று தயாரிக்கும் சுயஉதவிக்குழு!

2 months ago 10

கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைப் பயிர்களில் தென்னைக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு. இந்த மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. தென்னையில் 2 மாதத்திற்கு ஒருமுறை மகசூல் எடுத்து லாபம் பார்க்கிறார்கள் இங்குள்ள விவசாயிகள். குமரி மாவட்டத்தில் விளையும் தேங்காய்க்கு மற்ற மாவட்டங்களில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் பல லோடு தேங்காய் வெளி மாவட்டத்திற்கு பயணிக்கிறது.இதனால் குமரி மாவட்ட தேங்காய்க்கு நாளுக்கு நாள் மவுசு கூடி வருகிறது. இதனால் அரசு சார்பிலும், தனியார் சார்பிலும் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையே நாகர்கோவில் அருகே உள்ள சண்முகபுரம் ஆசிரியர் காலனியில் சகாய நகர் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் சுய உதவிக்குழு பெண்கள் இணைந்து தென்னங்கன்று உற்பத்திப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சகாய நகர் பஞ்சாயத்து அளவிலான மகளிர் மேம்பாட்டுத் திட்ட சுய உதவிக்குழு கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் விக்டோரியா ராணிபாய், செந்தில்குமாரி, ஆலிஷீலா, ஜாஸ்லின் ஜெபமலர், சுமதி, சரிதா ஆகியோர் தங்கள் குடும்ப வேலைகளைக் கவனித்துக் கொண்டே இந்த நாற்று உற்பத்திப் பணியைக் கவனித்து வருகிறார்கள். இவர்களைச் சந்தித்துப் பேசினோம்.

“மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின்படி தென்னை நாற்று தயாரிப்பது தொடர்பாக புத்தளத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை பண்ணையில் நாங்கள் 6 பேரும் பயிற்சி பெற்றோம். 90 நாட்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பின்போது ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஊக்கத்தொகையாக ரூ.375 வழங்கப்பட்டது. பயிற்சி முடிந்த பிறகு தென்னை நாற்று தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம். இதற்காக சகாய நகர் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தை பஞ்சாயத்துத் தலைவர் ஒதுக்கிக் கொடுத்தார். அங்கு 300 தரமான தேங்காய் வாங்கி நாற்றங்கால் தயாரித்துள்ளோம். நாற்றங்காலில் மணலை நிரப்பி, அதற்குத் தேவையான தொழுஉரங்களை நிரப்பி, அதன் மேல் தேங்காய்களை முளைக்க வைத்தோம். களைகள் முளைக்க முளைக்க அகற்றி விடுவோம். தினமும் தண்ணீர் ஊற்றி விடுவோம்.

நாற்றங்காலில் 90 நாட்களில் தென்னங்கன்று தயாராகி விடும். தற்போது நாங்கள் தயார் செய்துள்ள நாற்றங்கால் 90 நாட்களை கடந்து விட்டது. பலர் வந்து தென்னங்கன்றுகளை வாங்கிச்செல்ல தொடங்கி இருக்கிறார்கள். நாங்கள் தென்னை நாற்றங்கால் தயாரிக்க 300 தேங்காய்களை வாங்கினோம். அதற்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தோம். அதுமட்டும்தான் செலவு. மற்ற வேலைகள் அனைத்தையும் நாங்களே பார்த்துக்கொண்டோம். நாங்கள் தயாரித்துள்ள தென்னங்கன்றை ரூ.70 என்ற விலையில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளோம். 300 தென்னங்கன்றுகளை விற்பனை செய்யும்போது ரூ.21 ஆயிரம் கிடைக்கும். தேங்காய்க்கு கொடுத்த ரூ.6 ஆயிரம் போக மீதமுள்ள ரூ.15 ஆயிரம் லாபம்தான். நாங்கள் தொடர்ந்து பெரிய அளவில் தென்னங்கன்றுகளை தயாரித்து விற்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். இதற்காக ரூ.21 ஆயிரத்தில் இருந்து செலவு செய்ய இருக்கிறோம். செலவு போக மீதமுள்ள பணத்தை

எங்கள் குழுவில் உள்ள 6 பேரும் பகிர்ந்துகொள்வோம். வீட்டுவேலைகளை செய்தபடியே, இந்த வகையில் கிடைக்கும் லாபம் எங்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருகிறது!’’ என்கிறார். சகாயநகர் பஞ்சாயத்து தலைவர் மகேஷ் ஏஞ்சல் கூறுகையில், “ நானும் பஞ்சாயத்துத் தலைவர் ஆவதற்கு முன்பு சுயஉதவிக்குழுவில் இருந்தேன். இதனால் சுய உதவிக்குழுக்கள் செய்யும் தொழில்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. முதலில் எங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுய உதவிக்குழு பெண்கள் தென்னங்கன்று தயாரிக்கும் பணியை செய்வதற்கு என தனியார் நர்சரி கார்டனில் இடத்தை தேர்வு செய்து இருந்தனர். அங்கு நாற்று தயாரிக்கும்போது, நர்சரி உரிமையாளருக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும். அந்தத் தொகை சுய உதவிக்குழு பெண்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என கருதி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் காலியாக இருக்கும் இடத்தில் நாற்று தயாரிக்குமாறு கூறினேன். அதன்படி அவர்களும் வெற்றிகரமாக தென்னங்கன்றுகளை தயாரித்துள்ளனர். தென்னங்கன்று தயாரிக்கும் பணியை குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரடியாக வந்து பார்வையிட்டு, சுயஉதவிக்குழு பெண்களை வெகுவாக பாராட்டினார். மேலும் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள நிலத்திலும் தென்னங்கன்று தயாரிக்கும் பணியில் சுயஉதவிக்குழு பெண்கள் ஈடுபட நடவடிக்கை எடுப்பதாக கூறி ஊக்குவித்தார். அவரது ஊக்குவிப்பு சுயஉதவிக்குழு பெண்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
சரிதா: 97895 69046
மகேஷ் ஏஞ்சல்: 63803 72796.

தென்னங்கன்று தயாரிக்க தரமான தேங்காயைத் தேர்ந்தெடுப்பது அவசியம். இதை சுயஉதவிக்குழு பெண்கள் எப்படி செய்கிறார்கள் என விளக்கினர். “தென்னையில் முதல் குலையில் அறுவடைக்கு தயாராக இருக்கும் தேங்காயை இதற்கு தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் தேங்காய், மட்டையில் தாங்கிப் பிடித்து இருக்கக் கூடாது. தேங்காய் நேரடியாக தொங்கிய நிலையில் இருக்க வேண்டும். வெட்டும்போது கீழே போட்டு விடக்கூடாது. கயிறு கட்டி தேங்காயை கீழே இறக்க வேண்டும். பின்பு அந்தத் தேங்காயை 30 நாட்கள் வெளிச்சம் போகாத அறையில் போட்டு வைக்க வேண்டும். அதன்பிறகே கன்று தயாரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். தற்போது நாங்கள் தயாரித்துள்ள தென்னங்கன்றுகள் நெட்டை ரகக் கன்றுகள் ஆகும்’’ என்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஈத்தாமொழி தென்னைக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்தத் தேங்காய் அளவில் பெரியதாகவும், தேங்காயின் உள்பகுதியில் உள்ள பருப்பு திரட்சியாகவும் இருக்கும். இதனால் மற்ற ஊர்களில் இந்த தேங்காய்க்கு மவுசு ஜாஸ்தி.

வெட்டிவேர் வெள்ளாமை!

இயற்கையாகவே கிடைக்கும் மூலிகை வேர்களில் வெட்டிவேருக்கு தனி மவுசு. தற்போது வெட்டிவேரை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற பகுதிகளில் தனிப்பயிராக பயிரிடுகிறார்கள். குறிப்பாக கடலூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஏக்கர் கணக்கில் வெட்டிவேர் பயிரிடப்படுகிறது. வெட்டி வேரில் இருந்து எடுக்கப்படும் வாசனை எண்ணெய் சோப்பு, வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, வெட்டிவேரில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேர் எல்லா மண்ணிலும், எல்லா காலகட்டத்திலும் வளரக்கூடியது என்பதால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நடவு செய்து சாகுபடி செய்யலாம். ஒரு எக்டர் நிலத்தில் வெட்டி வேரை நடவு செய்ய சராசரியாக 5000 வெட்டிவேர் தூர்கள் தேவைப்படும். இதனை வரிசைக்கு வரிசை 60-75 செ.மீ இடைவெளியிலும், பார்களுக்கிடையே 45 செ.மீ இடைவெளியிலும் நட வேண்டும். இதனை நடும்போது நிலத்தை நன்கு உழுது அடியுரமாக 40 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய உரங்களை அடியுரமாக இட வேண்டும். வெட்டி வேர் செடிகள் நன்றாக வளர்ந்த பிறகு களைகள் அதிகம் வளராது. இப்படி வளர்த்து வந்தால் ஒரு எக்டரில் 5000 கிலோ வேர்கள் அறுவடை செய்யலாம். குறைந்தபட்சமாக 3000 கிலோ மகசூலாக கிடைத்தாலும், அதில் இருந்து 25-30 கிலோ எண்ணெய் பெற முடியும்.

The post தென்னங்கன்று தயாரிக்கும் சுயஉதவிக்குழு! appeared first on Dinakaran.

Read Entire Article