சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் சிறந்த திறமையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கும் (ஸ்கவுட்) திட்டத்தின் கீழ் தென்கொரியா நாட்டின் பல்கலைக்கழகங்களில் உலகளாவிய செயல்முறை பயிற்சி பெற்று வந்த 6 மாணவ, மாணவிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியியல் பயின்று வரும் 2 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளுக்கு தென்கொரியா நாட்டின் கச்சோன் பல்கலைக்கழகத்தின் பயோ – நானோ பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தில், இந்த மாதம் 9ம் தேதி முதல் 24ம் தேதி வரை நானோ பொருட்களின் தொகுப்பு மற்றும் பண்புகளில் ஈடுபடும் நானோ பொருட்களின் உயிரி மருத்துவம் மற்றும் ஆற்றல் பயன்பாடுகள் தொடர்பான மேம்பட்ட ஆராய்ச்சி முறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், இயற்பியல் துறையை சேர்ந்த 2 மாணவர்களுக்கு தென்கொரியா நாட்டின் பூசன் தேசிய பல்கலைக் கழகத்தில் இந்த மாதம் 9ம் தேதி முதல் 24ம் தேதி வரை மேம்பட்ட நிலையான எரிசக்தி ஆய்வகத்தில் சூரிய மின்கல தொழில்நுட்பம் மற்றும் நிலையான எரிசக்தி கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிகளின் காரணமாக பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் தென்கொரியா நாட்டின் கச்சோன் மற்றும் பூசன் பல்கலைக்கழகங்கள் அல்லது தென்கொரியா நாட்டின் பிற பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர வாய்ப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும், பயிற்சி பெற்றது குறித்தும் கேட்டறிந்தார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்தபோது, தென்கொரிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும், மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியும், வரவேற்பும் அளித்தனர், இந்த வாய்ப்பினை வழங்கிய முதல்வருக்கு மாணவ, மாணவிகள் நன்றி என்று தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தென்கொரியா பல்கலைகளில் செயல்முறை பயிற்சி பெற்று தமிழ்நாடு திரும்பிய மாணவர்கள் துணை முதல்வர் உதயநிதியுடன் சந்திப்பு appeared first on Dinakaran.