*போலீசார் எதிர்பார்ப்பு
தென்காசி : தென்காசி மாவட்டத்தின் பாதுகாப்பில் அச்சாணியாகத் திகழும் ஆயுதப்படை போலீசார், ஆயுதப்படை மைதானம் மற்றும் காவலர்களுக்கான குடியிருப்பு அமைத்துத்தர வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர். பொதுவாக எந்தவொரு மாவட்டத்தின் பாதுகாப்பில் அதிக அளவு பங்கெடுத்து கொள்வது ஆயுதப்படை போலீசார் ஆவர். ஒரு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 200 முதல் 500 போலீசார் வரை ஆயுதப்படையில் இருப்பது வழக்கம்.
மாவட்டத்தில் ஏற்படும் ஜாதி மோதல்கள், மத மோதல்கள், பதட்டத்தை ஏற்படுத்தும் கொலைகள், கலவரங்கள் உள்ளிட்ட சமயத்தில் ஆயுதப்படை போலீசாரின் பங்களிப்பும் தியாகமும் அளப்பரியது. இரவு பகல் பாராது கழிப்பிட வசதி, குளியலறை வசதி, சாப்பாட்டு வசதி, தூங்குவதற்கான வசதி உள்ளிட்ட எவற்றையும் பொருட்படுத்தாது பிரச்சனைக்குரிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது பெரும்பாலும் ஆயுதப்படை போலீசார் ஆவர். கைதிகளில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாதுகாப்பாக மீண்டும் சிறையில் ஒப்படைப்பது ஆயுதப்படை போலீசாரின் பணியாகும்.
200 முதல் 500 போலீசார் ஆயுதப்படை மைதானத்தில் தினமும் பயிற்சி எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பிரச்னையான இடங்களுக்கு செல்வதற்கு எப்பொழுதும் அவர்கள் தயார் நிலையில் வாகன வசதியுடன் இருக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய வாகனங்களுக்கும் தேவையான வாகன ஓட்டிகள் ஆயுதப்படையில் இருந்தே அனுப்பப்படுகின்றனர். உடல் தகுதியை பராமரிக்க தேவையான பயிற்சிகளை அவர்கள் தினமும் மேற்கொள்ள வேண்டும்.
அதற்கான மைதானம் வேண்டும். காவல்துறை வாகனங்களுக்கு நிரப்பப்படும் பெட்ரோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயுதப்படை மைதானத்தில் பங்க் அமைக்கப்பட்டு அதிலிருந்து தான் நிரப்பப்படுவது வழக்கம். பாதுகாப்பிற்கு தேவையான துப்பாக்கிகள், குண்டுகள், லத்திகள், கலவர தடுப்பு சீல்டுகள் கலவரங்களின் போது அல்லது ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்களின் போது பயன்படுத்தப்படும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனங்கள், வஜ்ரா வாகனங்கள், துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற காவலர்கள் என மாவட்டத்தின் பாதுகாப்பில் தனி பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக ஆயுதப்படை திகழ்கிறது.
தென்காசி மாவட்டத்தில் ஆயுதப்படைக்கு என மைதானம் தங்கும் இடம், பெட்ரோல் பங்க், ஆயுதங்கள் வைக்கும் குடோன், கேஸ் குடோன் உள்ளிட்டவை இல்லாத காரணத்தால் தற்போது குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத பேரூராட்சிக்கு சொந்தமான காலாவதியான கட்டிடங்களில் ஆங்காங்கே ஆயுதப்படை ஆண் காவலர்கள் தங்கி இருந்து வருவதுடன் பெண் காவலர்கள் நான்கு ஐந்து பேர் சேர்ந்து தனித்தனியாக வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர்.
இதனால் தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை ஆயுதப்படை என்பது முழுமையாக கம்பீரத்துடன் இல்லாத நிலை உள்ளது. எனவே ஆயுதப்படை மைதானத்திற்காக பரிசீலனையில் உள்ள இடத்தை விரைவில் அறிவித்து அங்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது போலீசார் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
விதைப்பண்ணை இடம் ஒதுக்கப்படுமா?
தென்காசி மாவட்டம் உதயமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கலெக்டர் அலுவலகம் திறக்க முடியாத நிலையில் உள்ளது. எஸ்பி அலுவலகம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பாதுகாப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதப்படைக்கு என்று தென்காசியில் இதுவரை இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆயிரப்பேரியில் இருந்து மேலகரம் செல்லும் பகுதியில் வேளாண்மை துறைக்கு சொந்தமான விதை பண்ணை இடம் பரிசீலனையில் உள்ளது.
இந்த இடம் ஏற்கனவே மாவட்டம் உதயமான புதிதில் கலெக்டர் அலுவலகத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் ஆகும். தற்போது இந்த இடத்திற்கு பாதை வசதிக்காக சில தனிநபர்களும் தங்களது இடத்தை தானமாக கொடுத்துள்ளனர்.
சுமார் 40 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த இடத்தில் ஆயுதப்படைக்கு தேவையான ஏக்கர் பரப்பளவை வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது போலீசார் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
The post தென்காசியில் ஆயுதப்படை மைதானம் காவலர் குடியிருப்பு அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.