
சென்னை,
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரித்தால், தமிழகத்தில் இருக்க கூடிய தொகுதிகளில் 8 தொகுதியை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது பற்றி விவாதிக்க, மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மூலமாக தென் மாநிலங்களின் குரலை மத்திய பாஜக அரசு நசுக்கத் திட்டமிடுகிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
இந்தியாவின் அடிப்படை கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியையும் முன்னகர்த்தி வரும் பாஜகவின் நீண்ட கால செயல்திட்டம் தான் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு. பல ஆண்டுகளாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து தென் மாநிலங்களின் குரலை நசுக்கத் திட்டமிடுகிறது ஆளும் மத்திய பாஜக அரசு. மத்திய அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நமது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களது தலைமையில் ஒன்றிணைவோம் என பதிவிட்டுள்ளார்.