துபாய்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இதில் இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்று பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி (62.82 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், இலங்கை (55.56 சதவீதம்) 3ம் இடத்திலும் உள்ளன.
வங்காளதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா (54.17 சதவீதம்) 5வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்து (50.00 சதவீதம்) ஒரு இடம் சரிந்து 5வது இடத்திலும், இங்கிலாந்து (40.79 சதவீதம்) 6வது இடத்திலும் உள்ளன. இதையடுத்து பாகிஸ்தான் 7-வது (33.33 சதவீதம்), இடத்திலும், 8 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (27.50 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.