தூத்துக்குடி, நவ. 8: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (9ம் தேதி) ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் சாந்தகுமாரி, சுரேஷ்பாண்டி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை வளர்ப்பதற்கும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், மூட நம்பிக்கைகளை களையவும் ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டு, 32வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு பள்ளி மாணவர்களை தயார் செய்யும் வகையில், பள்ளியின் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம், நாளை (சனிக்கிழமை) அந்தந்த வட்டாரங்களில் நடைபெறுகிறது. இதில் அனைத்து வகை பள்ளிகளில் விருப்பமுள்ள ஒரு ஆசிரியர் பங்கேற்க வேண்டும்.
கடந்தாண்டு நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டம் 4,500க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை இந்திய அளவில் சமர்ப்பித்து நாட்டிலேயே முதல் மாவட்டமாக சிறப்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் இந்தாண்டும் தூத்துக்குடி மாவட்டம் 10 ஆயிரம் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து 20 ஆயிரம் பள்ளி மாணவர்களை பங்கேற்கச் செய்து, மாவட்டத்திற்கு பெருமை தேடித் தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
The post தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம் appeared first on Dinakaran.