தூத்துக்குடி: தாய், மகள் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

13 hours ago 1

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாய், மகள் ஆகிய இருவரையும் கடந்த 2025 மார்ச் 3ம் தேதி அவர்களது வீட்டில் வைத்து மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதையடுத்து தூத்துக்குடி காவல்துறை சார்பில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் குற்றவாளிகளை தொழில்நுட்ப மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியோடு தீவிரமாக தேடினர். மேலும் இதில் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட போலீசார், மோப்பநாய் படைப்பிரிவு மற்றும் 6 ட்ரோன் கேமராக்கள் உதவியோடு 2 நாட்கள் இரவும், பகலுமாக குற்றவாளிகளை தீவிரமாக தேடினர்.

இதையடுத்து 2025 மார்ச் 6ம் தேதி அதிகாலையில் மேலநம்பிபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்து வெளியே வந்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 9 3/4 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.35 ஆயிரம் பணத்தை மீட்டனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், எட்டயபுரம் பகுதியில் தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான எட்டயபுரம், மேலநம்பிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான எட்டுராஜ் மகன் முனீஸ்வரன் (வயது 24), அம்மாசி மகன் மகேஷ்கண்ணன்(எ) கண்ணன் (வயது 28) மற்றும் எட்டயபுரம், தாப்பாத்தி பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் வேல்முருகன் (வயது 22) ஆகிய 3 பேரையும் நேற்று (04.04.2025) எட்டயபுரம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read Entire Article