தூங்கா நகர் மாநாடு இலைக்கட்சிக்குள் ஏற்படுத்தி இருக்கும் புகைச்சல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

1 week ago 2

‘‘முப்பது கார்கள் பின்தொடர இலைக்கட்சி தலைவரின் சொந்த ஊரில் ரத்தத்தின் ரத்தங்களுடன் பொதுமக்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு சுற்றிசுற்றி வருகிறாராமே நிழலானவர்..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் நிழலானவரின் கொடி உயர உயர பறந்துக்கிட்டே இருக்குதாம்.. மாங்கனி புறநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில் எட்டு தொகுதி இருக்குதாம்.. இதில் போட்டியிட விரும்புவோர் தன்னை பின்தொடர நிழலானவர் புதிய தந்திரத்தை கையிலெடுத்து உள்ளாராம்.. அதுவும் தன்னை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கணுமுன்னு நிழலானவரு போட்டு வைக்கும் தந்திரம் சிறப்பா செயல்பட்டுக்கிட்டு இருக்குதாம்.. யார் போய் சீட் கேட்டாலும் உனக்கு தான் என்று உறுதியா சொல்வாராம்.. ஒரு தொகுதியில 5 ஒன்றிய செயலாளர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து இம்முறை உனக்கு தான் சீட்டு, தலைவரிடம் சொல்லிட்டேன், அவரும் சரியென சொல்லிட்டார், கட்சி வேலையை பார் என்று கூறி உற்சாகப்படுத்தி அனுப்பி விடுவாராம்.. இப்படி சீட் கேட்டு செல்லும் அனைவருக்கும் சொல்லி வச்சிருப்பதாக கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க… இதனை உண்மையென நம்பும் ரத்தத்தின் ரத்தங்களும் அவரை சுற்றி சுற்றியே வர்றாங்களாம்.. அதோடு அவர் செல்லும் இடமெல்லாம் சொகுசு காரிலேயே சுத்துறாங்களாம்..

அதுவும் சுமார் முப்பது கார்கள் பின்தொடர்ந்து செல்வது என்பது இலைக்கட்சி தலைவருக்கு கூட இல்லையாம்.. ஆனால், இந்த மரியாதையை எல்லாம் நிழலானவரு ரொம்பவே அனுபவிச்சிக்கிட்டு வர்றாராம்.. வரிசையா செல்லும் கார்களை பார்க்கும் பொதுமக்களும் மூக்கின்மேல் விரலை வைக்காங்களாம்.. இதனை வீடியோவா பதிவு செய்து, மாண்புமிகு மாவட்டம் என்ற சமூக வலைதலங்களில் பதிவிறக்கம் செஞ்சி விடுறாங்களாம் அவரது அடிப்பொடிகள். மாநிலத்தை ஆண்டிருந்தாலும் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் இலைக்கட்சி தலைவர் பின்னால் கூட கட்சிக்காரங்க போவதில்லை. ஆனால், இவருக்கு மட்டும் எப்படின்னு கேள்வி கேட்பதோடு, தலைவரின் பார்வைக்கும் வீடியோவ தட்டிவிட்டிருக்காங்களாம் விசுவாசிகள்.. ஆட்சி இருந்தாலும் இல்லை என்றாலும் இவரே எங்களது மந்திரின்னு சொல்லி மகிழ்கிறாங்களாம் நிழலானவரின் அடிப்பொடிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனி சண்டையில் அன்பானவரின் ஆதரவாளர்களுக்கு கல்தா கொடுப்பது ஒருபுறமும், ஓரங்கட்டப்பட்ட மாஜிக்களுக்கு ஜாக்பாட்டும் காத்திருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி கட்சியில் தந்தையுடன் தொடர்ந்து மகன் மல்லுக்கட்டும் நிலையில் விரிசல் மேலும் மேலும் அதிகரித்தபடி இருக்காம்.. இதன் தாக்கம் நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரையிலும் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறதாம்.. குறிப்பாக மாங்கனி செல்வாக்கான தொகுதிகளில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவும் வரும் தேர்தலில் அக்கட்சி மிகப்பெரிய சரிவையே சந்திக்கும் என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்துள்ளதாம்..
ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் இரு துருவ அரசியல் பாணியை தந்தை, மகன் இருவரும் பின்தொடரும் நிலையில் தோட்டத்தில் உண்ணாவிரதம் அறிவித்த நிர்வாகிக்கு நிறுவனரிடம் இருந்து கடும் டோஸ் விழுந்ததாம்.. அத்துடன் தோட்டத்து நுழைவாயிலில் இருந்த அன்பு கண்மணியின் படங்கள் எல்லாம் கிழித்து அகற்றப்பட்டுள்ளதாம்.. அதுமட்டுமின்றி அன்பானவரிடம் நெருக்கமாக உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் கட்சிப் பதவிகளில் இருந்து ஒவ்வொருவராக கல்தா கொடுக்கப்படுகிறதாம்.. இதற்கான லிஸ்ட் தந்தையின் கையில் நெருங்கிய உறவால் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாம்.. இதனால் கட்சியில் ஓரங்கட்டப்பட்டிருந்த மாஜிக்களுக்கு ஜாக்பாட் காத்திருக்கிறதாம..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகரத்தில் நடந்த மாநாடு இலைக்கட்சிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரில் நடந்த மாநாடு, இலைக்கட்சிக்குள் எக்கச்சக்கமாக புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறதாம்.. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ேநாக்கத்தில் நடந்த இந்த மாநாட்டை மத அமைப்பு நடத்தியதாக கூறப்பட்டாலும், பின்புலத்தில் இருந்து தாமரை தரப்புதான் முழுவதுமாக இயக்கி இருக்கிறதாம்.. பெரிய அளவில் கூட்டம் சேர்க்கவேண்டும் என்று பணம் வாரி இறைக்கப்பட்டதாம்.. புதிதாக கூட்டணியில் சேர்ந்த குஷியில், இலை தரப்பைச் சேர்ந்த சேலத்துக்காரர் இந்த மாநாட்டிற்கு வாழ்த்து சொன்னதோடு நிற்காமல், ஒருபடி மேலே போய் தென்மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய மாஜிக்களை அழைத்து மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அன்பு கட்டளை வேற போட்டாராம்.. இவரது அன்புக் கட்டளையை தட்ட முடியாமல், மாஜிக்களான தெர்மாகோல்காரர், உதயமானவர், கடம்பூர்காரருடன், மாஜி பால்வளமும் கலந்துக்கிட்டாங்க.. இவர்களை மேடையில் உட்கார வைத்துக் கொண்டே, இவர்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர்களை மாநாட்டு தரப்பு கடுமையாக விமர்சித்து வீடியோவை ஒளிபரப்பியிருக்கு..

தங்கள் கொள்கைத் தலைவர்களை மாநாட்டு தரப்பு அவதூறாக விமர்சிப்பதைக் கண்டு இலைக்கட்சி மாஜிக்கள் திக்குமுக்காடிப் போனார்களாம்.. வாயைத் திறந்தால் வம்பு வந்து விடும். வாயைத் திறக்காமல் இருந்தாலும் விமர்சனங்கள் வெடிக்கும் என்ற நிலையில் மாநாடு முடியும் வரை இருக்கைகளில் பரிதாபமாக நெளிந்தபடியே இருந்தாங்களாம்.. மாநாடு முடிந்து வெளியே வந்த பிறகும் தூங்கா நகரத்து உதயம், தெர்மாகோல், செல்லம் ஆகிய மாஜிக்கள் இதுவரை ஒரு மரியாதைக்குக் கூட வாயைத் திறக்காதது, கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்காம்.. ‘இன்னும் இவங்களை நம்புனா கட்சியை முட்டுச்சந்துக்குள்ள கொண்டு போய் நிறுத்திடுவாங்க போல இருக்கே’ என்று ஒருவருக்கொருவர் புகைந்து கொள்கிறார்களாம்.. ‘அவங்களுக்கு என்னப்பா, என்ன வேணும்னாலும் பேசுவாங்க.. நாம என்ன பண்ண முடியும்? தாமரை தரப்பை விமர்சனம் செஞ்சா, சேலத்துக்காரர் டென்ஷனாயிடுவாரு.. வாயைத் திறக்காம கமுக்கமாக கொஞ்ச நாள் இருந்திட்டம்னா… விஷயம் தானாகவே மறந்து போயிடும்’ என்று புலம்பியபடியே டோட்டல் சைலண்ட் மோடுக்கு போய்விட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஐஏஎஸ் அதிகாரிங்க திடீர் மாற்றத்தில் சீனியர் ஒருவரை ஜூனியர் அதிகாரியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது பலகேள்விகளை எழுப்பி இருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழகம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருக்காங்க.. அதில், அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான பிரகாஷ், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டதுதான் பெரிய அளவில் பேசும்பொருளாக ஆகி உள்ளதாம்.. அதேபோல, வணிகவரித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ் 2009ம் ஆண்டு ஐஏஎஸ் ஆக தேர்வு செய்யப்பட்டவராம்.. அவருக்கு கீழ் அதாவது வணிகவரித்துறை, பத்திரப்பதிவுத்துறை என 2 துறைகள் இருக்கு.. அதில் ஒரு துறையான வணிக வரித்துறைக்கு 2005ம் ஆண்டு ஐஏஎஸ் ஆக தேர்வு செய்யப்பட்ட நாகராஜ் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கார்.. ஏன் சீனியரை நான்கு ஆண்டுகள் ஜூனியரான பெண் ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் நியமித்திருக்காங்க என்ற கேள்விகளும் கோட்டை வட்டாரத்தில் எழுந்திருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

 

The post தூங்கா நகர் மாநாடு இலைக்கட்சிக்குள் ஏற்படுத்தி இருக்கும் புகைச்சல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article