துரைப்பாக்கம், நவ.15: துரைப்பாக்கம் கண்ணகி நகரில், அரசின் நலத்திட்ட உதவி பெற்றுத்தருவதாக நடித்து, பிறந்து 45 நாட்களான ஆண் குழந்தையை கடத்தி சென்ற மர்ம பெண் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (40). இவரது மனைவி நிஷாந்தி (31). இவர்களுக்கு, கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு வந்த ஒரு பெண், அரசு சார்பில் குழந்தைக்கு வழங்கப்படும் திட்டங்கள் உள்ளது.
அதனை, நான் வாங்கி தருகிறேன் எனக்கூறி, தி.நகர் பகுதிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் அந்த பெண், நிஷாந்தியிடம் 100 ரூபாய் கொடுத்து, குழந்தைக்கு பால் பாக்கெட், பிஸ்கெட் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு வா, என்று அனுப்பியுள்ளார். கடைக்கு சென்ற நிஷாந்தி திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையும், அந்த பெண்ணையும் காணவில்லை. இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த நிஷாந்தி, தி.நகரில் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தையுடன் சென்ற பெண் கிடைக்கவில்லை. பின்னர், இதுகுறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் தயாள் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குழந்தையை கடத்தி சென்ற மர்ம பெண் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 45 நாட்களான ஆண் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post துரைப்பாக்கம் கண்ணகி நகரில் பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல்: பெண்ணுக்கு வலை appeared first on Dinakaran.