தும்பையின் பயன்கள்!

3 hours ago 2

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

இயற்கை ஓர் அற்புதமான படைப்பு. காலச்சூழல்களுக்கேற்ப நம்மை பாதுகாக்கும் சர்வ வல்லமை கொண்டது. அந்தவகையில் மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், தலைவலி போன்றவற்றை தடுக்கக்கூடிய அற்புத மூலிகை தும்பை. தும்பை என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது வெண்மை. ஏனெனில் இதில் காணப்படும் பூக்கள் தூய வெண்மை நிறத்துடன் இருப்பதினால் தும்பையை வெண்மைக்கு உதாரணமாக கூறப்படுகிறது.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளிலும், சாலையோரங்களிலும் இயல்பாக வளர்ந்து இச்செடி காணப்படும். இவை தரையோடு ஒட்டி வளரும் தாவரமாகும். இதில் எதிரெதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகள் காணப்படும். சுமார் 20 செ.மீ. உயரம் முதல் 50 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. தும்பையில் பல வகைகள் உண்டு. அவை, கவிழ்தும்பை, மலைத்தும்பை, பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, காசிதும்பை ஆகும். தும்பையின் இலை, பூ மற்றும் வேர் என முழுத்தாவரமும் மருத்துவ தன்மை கொண்டது.

இருப்பினும் இலை மற்றும் பூ பல்வேறு மருத்துவ காரணங்களுக்காக தொடக்க காலத்திலிருந்தே நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தும்பையின் தாவரவியல் பெயர் லியுகஸ் அஸ்பெரா ஆகும். இது லேபிடேசியே எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தும்பைச் செடி வளர்ந்து காணப்படுகின்றது.

தும்பையில் காணப்படும் மூலக்கூறுகள்:

பிளேவோனாய்டுகள்- உடலில் ஏற்படும் அழற்சிகளை தடுக்க உதவுகின்றது.

டானின்கள் – நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது

ஆல்கலாய்டுகள் – வலி நிவாரணியாகவும் மன அழுத்தத்தை நீக்கவும் பயன்படுகிறது.

நார்ச்சத்துகள் – செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

வைட்டமின் சி – நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கவும் சரும நோயை தவிர்க்கவும் உதவுகிறது.

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் – எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

தும்பையின் மருத்துவ பண்புகள்:

சளி, இருமல், தும்மல் மற்றும் ஒற்றைத்தலைவலி பிரச்னைக்கு சிறந்த தீர்வாக தும்பை சிறந்து விளங்குகிறது.

செரிமானக்கோளாறு, வயிற்றுவலி, மலச்சிக்கல் மற்றும் அல்சர் போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது.

சரும நோய்களை தவிர்க்க உதவுகிறது.

மழைக்காலங்களில் ஏற்படும் தலைவலி, தலைபாரம் போன்றவற்றை தடுக்கபயன்படுகிறது.

மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவதற்காகவும் தும்பை பயன்படுத்தப்படுகிறது.

நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தும்பை பயன்படுகிறது.

சிறுநீரகக்கல் பிரச்னைக்கு ஒரு சிறந்த மருந்தாக தும்பை பயன்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு குறிப்பாக மாதவிடாய் பிரச்னைகள் மற்றும் கருப்பை சார்ந்த பிரச்னைகளுக்கு மருந்தாக தும்பை பயன்படுகிறது.

பல்வேறு பயன்களைக் கொண்ட தும்பையை கவனமாக மருத்துவ காரணங்களுக்கு பயன்படுத்த வேண்டும். பூ மற்றும் இலையின் அளவினை சரியான ஆலோசனைக்கு பிறகே கொதிக்கவைத்தோ அல்லது பாலில் கலந்தோ உட்கொள்ளலாம்.

நல்லெண்ணெயில் தும்பைப் பூ மற்றும் சிறிது மிளகு, ஓமம் சேர்த்துக் காய்ச்சி, எண்ணெய்க் குளியல் செய்து வர, எவ்விதமான நோயும் உங்கள் உடலுக்குள் எட்டிப் பார்க்காது. குறிப்பாக, ஒற்றைத் தலைவலியைக் குணமாக்க வழி தேடுபவர்கள் இந்த எண்ணெய்க் குளியலை முயலலாம்.

சருமத்தில் தோன்றும் எரிச்சல், சிரங்கு, சொறி போன்ற அறிகுறிகளுக்கு, தும்பை இலையை அரைத்து உடல் முழுவதும் பூசிய பின் குளிக்கலாம். தலைபாரம், சளி அவதிப்படுத்தும்போது, இதன் இலைகள் மற்றும் மலர்களைக் கசக்கி வெந்நீரிலிட்டு ஆவி பிடிக்கலாம்.

தும்பைச் சாறு ஒரு தேக்கரண்டி, சிறிது மிளகுத்தூள் மற்றும் தேன் சேர்த்துக் குடிக்க, வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும்.

தலைபாரத்துக்குத் தும்பைப் பூவைச் சாறு பிழிந்து, ஒரு மெல்லிய துணியில் நனைத்து நெற்றியில் பற்றுப் போடலாம். இதன் மலரை மென்று சாப்பிட, தொண்டைப் புண் குணமாகும்.

தும்பையின் மருத்துவ பண்புகள் குறித்து பதார்த்த குணப்பாட நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தும்பை இலையின் மருத்துவ குணம்

சீறுகின்ற பாம்போடு சில விஷங்கால் சென்னிவலி

யேறுகப மாந்தமிருக்குமோ – நாறுமலர்க்
கொம்பனைய மாதே குளிர்சீத அன்னிவிடுந்
தும்பையிலை பையன்றொருகாற் சொல்
தும்மையிலை யெயுண்ணுஞ் சோற்றுக் கெலாங்கறியா

யம்புவியோர் மிக்க வருவந்தங்கால் – வெம்பிவரு
மேகமொடு கண்புகைச்சல் வீறுகை காலசதி
தாகமதி சோம்பலுறுந் தான்
தும்பை பூவின் மருத்துவ குணம்
தாகங்கடிந்தொழியுஞ் சன்னிபாதங்களறு
மாகந் தனில் வருநோயண்டுமோ மாகந்த
வம்மைப் பீறுங்குயத்து மாதேநின் செங்கரத்தாற்
தும்பைபூத் தன்னைத் தொடு.

The post தும்பையின் பயன்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article