துப்பாக்கியை சுத்தம் செய்தபோது பயங்கரம்; காலில் குண்டு பாய்ந்ததில் நடிகர் கோவிந்தா படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

3 months ago 25

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா, தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, எதிர்பாராவிதமாக குண்டு வெடித்ததில் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் சீனியர் நடிகர் கோவிந்தா (60). இவர், பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவர் இன்று காலை கொல்கத்தாவில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல இருந்தார். அதற்கு முன்பாக இன்று காலை மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது விரல் ட்ரிக்கரில் பட்டுவிட, துப்பாக்கியில் இருந்து குண்டு சீறி பாய்ந்துள்ளது. இதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

துப்பாக்கியுடன் கீழே சாய்ந்து கிடந்த அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு காலில் பாய்ந்திருந்த குண்டை மருத்துவர்கள் அகற்றினர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘கோவிந்தாவுக்கு காலில் பாய்ந்திருக்கும் குண்டு அகற்றப்பட்டு விட்டது. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அபாயக்கட்டத்தை தண்டி விட்டார். காலில் ஏற்பட்டுள்ள காயம் சில நாட்களில் சரியாகிவிடும். அதுவரை கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும்’ என்றனர். கோவிந்தா கூறுகையில், உங்கள் அனைவரின் மற்றும் எனது பெற்றோரின் ஆசியுடன் தோட்டா அகற்றப்பட்டது.

உங்கள் பிரார்த்தனையில் என்னை காப்பாற்றிய மருத்துவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி’ என்றார். சம்பவம் குறித்து புகார் எதுவும் தெரிவிக்காததால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று ஜூஹூ போலீசார் தெரிவித்தனர். கடந்த 1963ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி, மும்பையில் சீனியர் நடிகர் அருண் அஹுஜாவுக்கு மகனாக பிறந்தவர் கோவிந்தா. அவரது குடும்பம் கலைக்குடும்பம் என்பதால், கோவிந்தாவுக்கும் இந்தியில் நடிகராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 1986ல் வெளியான ‘லவ் 86’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அவர், கடைசியாக 2019ல் வெளியான ‘ரங்கீலா ராஜா’ வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர், ரசிகைகளை பெற்றிருக்கும் சீனியர் நடிகரான கோவிந்தா, அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

 

The post துப்பாக்கியை சுத்தம் செய்தபோது பயங்கரம்; காலில் குண்டு பாய்ந்ததில் நடிகர் கோவிந்தா படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Read Entire Article