சென்னை: ஆந்திராவில் இருந்து ஒருவர் சென்னைக்கு போன் செய்து ஒரு கிலோ போதை பொருட்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதை நோட்டமிட்ட தனிப்படை போலீசார், அரும்பாக்கம் காவல் நிலைய உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் கொண்ட தனிப்படை போலீசார் இந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு, ‘‘எங்களுக்கு போதை பொருட்கள் தேவைப்படுகிறது. மாதவரம் பஸ் நிலையத்துக்கு வந்தால் வாங்கி கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய விஸ்வநாதன் உடனடியாக ஆந்திராவில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் சென்னைக்கு வந்தார். இதில் விஸ்வநாதனின் நண்பர் சதீஷ், பைக்கில் காத்து கொண்டிருந்தார். இருவரும் மாதவரம் பஸ் நிலையத்துக்கு வந்து அங்கு செல்போன் அழைப்புக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு குறிப்பிட்ட நபர்கள் யாரும் இல்லாததால் தனக்கு வந்த நம்பருக்கு மீண்டும் தொடர்பு கொண்டு, ‘’நீங்கள் எங்கே உள்ளீர்கள்’’ என விஸ்வநாதன் விசாரித்துள்ளார்.
அப்போது எதிர்முனையில் பேசிய தனிப்படை போலீசார், ‘’வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் அணிந்து காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்ததையடுத்து கண்டுபிடித்து அந்த நபர் அவர்கள் அருகே சென்றுள்ளார். அங்கு நின்று கொண்டிருப்பது போலீசார் என அவர்களின் அடையாளத்தை கண்டு பிடித்து அதிர்ந்துபோன இருவரும், போதை பொருட்களை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் போலீசார் விரட்டிச்சென்று அவர்களை பிடிக்கும்போது இருவரும் தங்களை பிடிக்க வந்த போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து மீண்டும் தப்பிக்க முயற்சி செய்தனர்.
அப்போது, அரும்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விரட்டி சென்று சினிமா பட பாணியில் துரத்தி சென்றனர். போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பிக்க முயன்றதால் அரும்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி துப்பாக்கி முனையில் இருவரையும் மடக்கி பிடித்தார். உடனே அருகே இருந்த மற்ற போலீசாரும் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனால் அங்கிருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் , அவர்களை அரும்பாக்கம் காவல் நிலையம் கொண்டு சென்று நடத்திய விசாரணையில் ஆந்திராவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (45) இவரது நண்பர் சதீஷ் (40) என தெரிய வந்தது.
இதில் சதீஷ் சென்னையை சேர்ந்தவர். மேலும், விஸ்வநாதன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர், பெங்களூருவில் இருந்து குறைந்த விலையில் மெத்த மெட்டமைன் போதை பொருட்களை வாங்கிவந்து தனது வீட்டில் பதுக்கிவைத்து வாட்ஸ் அப் மூலம் விற்பனை செய்துள்ளார் என்று தெரியவந்தது. போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து விஸ்வநாதனிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், இரு செல்போன் மற்றும் பைக் பறிமுதல் செய்தனர். நேற்று அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.
The post துப்பாக்கி முனையில் 2 பேரை சுற்றிவளைத்து ரூ.1 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.