சென்னை: சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் இருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பயணியின் சூட்கேசில் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் அடையாளமிட்டு, அந்த சூட்கேஸை மீண்டும் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர். அதன்படி, சுங்க அதிகாரிகள் அந்த சூட்கேஸை ஸ்கேன் செய்து பார்த்தபோது, சிறிய தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
சூட்கேசுக்குள் இருந்த ரூ.14 லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக, துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் அதிகாலை, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில், சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி சூட்கேசில் கடத்திய ரூ.14 லட்சம் மதிப்புடைய 150 கிராம் கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், பயணியிடம் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், துபாயில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்கா, கொல்கத்தா வழியாக சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது, தங்கப் பசையை சிறிய 3 உருண்டைகளுக்குள் அடைத்து, உடலின் பின் பகுதி, ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அவரை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பாதுகாப்புடன் அந்த உருண்டைகளை வெளியில் எடுத்தனர். அதனை பிரித்து பார்த்தபோது 409 கிராம் தங்கப் பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.38 லட்சம். இதையடுத்து தங்க பசையை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர். சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் துபாய், சிங்கப்பூரில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.66 லட்சம் மதிப்புடைய 709 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
The post துபாய், சிங்கப்பூரில் இருந்து விமானங்களில் சென்னைக்கு கடத்தி வந்த ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல்: 3 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.