துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.90 லட்சம் தங்கபசை பறிமுதல்: இலங்கை பயணி கைது

2 weeks ago 5

மீனம்பாக்கம்: துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான 1.24 கிலோ தங்க பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கை பயணி கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து சென்னை வரும் விமானத்தில் அதிகளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சர்வதேச முனைய வருகை பகுதியில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று துபாயில் இருந்து தனியார் விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர்.

குறிப்பாக, அந்த விமானத்தில் வந்துவிட்டு, மாற்று விமானத்தில் டிரான்சிஸ்ட் பயணிகளாக செல்பவர்களை தீவிரமாக கண்காணித்தனர். இதில் இலங்கையை சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண், கழிவறைக்கு சென்று நீண்ட நேரம் கழித்து வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே கழிவறைக்குள் சென்று சோதனை செய்தனர். இதில், கழிவறையின் தண்ணீர் தொட்டிக்குள் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றிய பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அதை எடுத்து பிரித்து பார்த்தபோது பசை வடிவில் தங்கம் இருந்தது தெரியவந்தது. சுமார் ரூ.90 லட்சம் மதிப்பிலான 1.24 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டிருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் டிரான்சிஸ்ட் பயணிகள் அமரும் பகுதியில் இருந்த இலங்கை பயணியை மடக்கி பிடித்து, சுங்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். அதோடு, தான் கடத்தல் குருவியாக சர்வதேச கடத்தல் கும்பலிடம் கூலிவேலை செய்வதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தங்கத்தை கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த பயணியை கைது செய்தனர். அவரிடம் கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து தங்க பசை பார்சலை வெளியில் எடுத்து செல்ல வர இருந்தது யார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.90 லட்சம் தங்கபசை பறிமுதல்: இலங்கை பயணி கைது appeared first on Dinakaran.

Read Entire Article