சென்னை,
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கும்போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று முக்கிய அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.