சென்னை: தீவிரவாத அமைப்புகள் மீதான இந்திய ராணுவ தாக்குதல் நடவடிக்கைக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். நீடித்த அரசியல் தீர்வு, பிராந்திய அமைதியை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “இந்திய இராணுவ நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.பயங்கரவாதத்தை அழித்தொழிப்பது நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமே ஆகும். எனவே, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ள இந்த தாக்குதல் நடவடிக்கை இன்றியமையாத தேவையாக உள்ளது.
அதேவேளையில், இந்த இராணுவ நடவடிக்கையானது ஒரு போராக மாறிவிடாமல் தடுக்கவும், நாட்டின் அமைதியைப் பாதுகாக்கவும், நீடித்த அரசியல் தீர்வுகளை நோக்கிய இராஜதந்திர நடவடிக்கைகள் தேவை என்னும் முக்கியத்துவத்தை விசிக சுட்டிக்காட்ட விரும்புகிறது.
பாகிஸ்தானில் ஒளிந்துள்ள பயங்கரவாதிகள் மீதான இந்த நடவடிக்கை, நமது நாட்டில் இஸ்லாத்தைப் பின்பற்றும் குடிமக்கள் மீதான வெறுப்பாகத் தடம் புரண்டுவிடாதபடி பார்த்துக் கொள்ளுமாறும் ஒன்றிய அரசாங்கத்தை விசிக கேட்டுக்கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.
The post தீவிரவாத அமைப்புகள் மீதான இந்திய ராணுவ தாக்குதல் நடவடிக்கைக்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு appeared first on Dinakaran.