தீவிரமடையும் வர்த்தகப்போர்: சீன பொருட்கள் மீது 245 சதவீத வரி - அமெரிக்கா அதிரடி

1 day ago 2

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அதன்படி, இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வரிவிதித்தார். இதனை தொடர்ந்து 90 நாட்களுக்கு இந்த வரிவிதிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார். அதேவேளை, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி நீடிக்கும் என்றார். சீனா மீது கூடுதலாக வரி விதிப்பை அறிவித்தார்.

அதன்படி, சீனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிரடி வரி உயர்வை டிரம்ப் அறிவித்தார். இதற்கு சீனாவும் தக்க ரீதியில் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியை 125 சதவீதமாக சீனா உயர்த்தியது.

மேலும், அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது. மேலும் விமானம் தொடர்பான எந்த கருவிகளையும் அமெரிக்காவிடமிருந்து வாங்க வேண்டாம் எனவும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது. இதனால், அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தகப்போர் தீவிரமடைந்தது.

இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 245 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. 145 சதவீதமாக இருந்த வரி தற்போது மேலும் 100 சதவீதம் உயர்த்தப்பட்டு 245 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், உலக அளவில் பெரும் தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பிற்கு சீனாவும் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன பொருட்கள் மீதான வரி 245 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது என்று அமெரிக்கா அறிவித்த நிலையில் அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக எதிரொலித்துள்ளது. காலை முதல் ஏற்றத்துடன் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை தற்போது கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Read Entire Article