
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் ஹண்டல்படா கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. ஒருமாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், மூடநம்பிக்கையால் குழந்தையின் உடலுக்குள் தீயசக்தி புகுந்துவிட்டதாக நினைத்த குடும்பத்தினர், குழந்தையை மறுத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லவில்லை. அதற்கு மாறாக தீயசக்தியை விரட்ட வேண்டும் என கூறி பச்சிளம் குழந்தையின் தலை, வயிறு பகுதியில் இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைத்துள்ளனர்.
இரும்பு கம்பியால் சூடு வைத்ததில் குழந்தைக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையின் உடலில் இரும்பு கம்பியால் சூடு வைத்த அடையாளங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.