தீபாவளியையொட்டி, நவ.1ம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்: தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

4 weeks ago 4

காஞ்சிபுரம்: தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ம்தேதி உள்ளாட்சிகள் தினம் வருவதால், அன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளநிலையில், அன்று நடபெறும் கிராம சபை கூட்டத்தை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கான கூட்டமைப்பு, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 31ம்தேதி கொண்டாடப்படும் நிலையில், அதற்கு மறுநாள் நவம்பர் 1ம்தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு நவம்பர் 1ம்தேதி அரசு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1ம்தேதி உள்ளாட்சிகள் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கும், அதனை முன்னிட்டு கிராம சபை கூட்டங்களை நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நவம்பர் 1ம்தேதியை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், கிராம வார்டு உறுப்பினர்களும், கிராம மக்களும், நோன்பு பண்டிகை என்பதால் அதிகளவில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். கூட்டம் நடத்த தேவையான போதிய குறைவெண் வரம்பு இல்லை என்றாலும், தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதனால், நவம்பர் 1ம்தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்தை வேறு தேதியில் சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் எம்டி.அஜய்குமார், செயலாளர் பொன்னா (எ) வெங்கடேசன் ஆகியோர் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தீபாவளியையொட்டி, நவ.1ம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்: தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article