தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விஜிலென்ஸ் அதிரடி சார் பதிவாளர் ஆபீஸ்கள் உட்பட 37அரசு அலுவலகங்களில் ரெய்டு: கணக்கில் வராத ரூ.33.50 லட்சம், பரிசு பொருட்கள் பறிமுதல்

3 weeks ago 4

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சோதனையாக தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்பட 37 அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 33.50 லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டு தோறும் பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், சுற்றுசுழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு அலுவலகங்கள், தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து, நகராட்சி அலுவலகங்களில் அதிகளவில் பணம் புழக்கம் இருப்பதாக உளவுத்துறை மூலம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய் குமார் சிங் உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் அதிகளவில் பணம் புழக்கத்தில் இருந்த பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்த அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவை தொடர்ந்து நேற்று மதியம் திடீரென மாவட்ட வாரியாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பிக்கள் உத்தரவுப்படி டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று அதிகளவில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் அதிகளவில் நடமாட்டம் இருந்ததாக வந்த தகவலின் படி, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 3 பெண் எஸ்ஐக்கள் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளார் கிருஷ்ணமூர்த்தி அறை உட்பட அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

அப்போது பத்திரப்பதிவு செய்ய வந்த அனைவரையும் வெளியே விடாமல் அலுவலக கதவை சிறிது நேரம் மூடி அலுவலகத்தில் இருந்த அனைவரிடமும் பேன்ட் பாக்கெட், கைப்பையிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பத்திரப்பதிவு செய்ய எந்த இடையூறும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் செய்யவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சரவணன் தலைமையியில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 4 மணி அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதா உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆலந்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஷர்மு தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் கிடைத்த கணக்கில் வராத பணம் தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதேபோல், கிண்டியில் அமைந்துள்ள ஆலந்தூர் சென்னை பெருநகர மாநகராட்சியின் 12வது மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று மாலை 5.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்தனர். செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழு அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது இடைத்தரகர்கள் மற்றும் சார் பதிவாளர் ஊழியர்களிடம் இருந்து பரிசு பொருட்கள் மற்றும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சென்னை விருகம்பாக்கம், தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகம், சேலையூர் சார் பதிவாளர் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல லட்சம் ரொக்கப் பணம், துணிகள், கிப்ட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனை சாவடியில் நடந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் காட்பாடி, அரக்கோணம், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, திருப்பத்தூர், தூத்துக்குடி, ராதாபுரம், ரங்கம், தஞ்சை, தேனி, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், அவிநாசி, தேன்கனிக்கோட்டை, திருச்செங்கோடு, குமரி, அரூர், காரைக்குடி, ஒட்டன்சத்திரம், கோவை, சங்கராபுரம் உட்பட இடங் களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு என தமிழகம் முழுவதும் 34க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.33,50,000 பறிமுதல் செய்யப்பட்டது.

* இன்ஸ்பெக்டருக்கு ரூ.25,000 லஞ்சம்: டாஸ்மாக் மேலாளர், உதவியாளர் கைது
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனை அருகில் தனியார் மண்டபத்தில் சேத்தியாத்தோப்பு மற்றும் காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அங்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செந்தில்குமார் டாஸ்மாக் பணியாளர்களிடம் தீபாவளி வசூலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகவல் அடிப்படையில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சுந்தராஜ், திருவேங்கடம், அன்பழகன் தலைமையிலான குழுவினர் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனை அறிந்த சிலர், அவ்விடத்தை விட்டு நைசாக கலைந்தனர்.அப்போது மாவட்ட மேலாளர் செந்தில்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்துக்கு ரெய்டு நடத்தாமல் இருக்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். உடனடியாக சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், செந்தில்குமார் மற்றும் அவரது உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

The post தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விஜிலென்ஸ் அதிரடி சார் பதிவாளர் ஆபீஸ்கள் உட்பட 37அரசு அலுவலகங்களில் ரெய்டு: கணக்கில் வராத ரூ.33.50 லட்சம், பரிசு பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article