புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. காற்றின் தரம் நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு அரசு தடை விதித்தது. இதன்படி டெல்லியில் பட்டாசு விற்பனை செய்யவோ அல்லது சேமித்து வைக்கவோ தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் தீபாவளி பண்டிகை அன்று டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில், டெல்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் சரியாக அமல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன் டெல்லியில் காற்று மாசு குறித்து சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது. தடையை ஏன் திறம்பட அமல்படுத்தவில்லை என்பதை ஒரு வாரத்தில் தெளிவுபடுத்துமாறு டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது. பட்டாசுகளுக்கு தடை என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை என ஊடகங்களில் பரவி வரும் செய்திகளைக் கவனித்த சுப்ரீம் கோர்ட்டு, தானாக முன்வந்து டெல்லி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.