தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கும்போது கான்டாக்ட் லென்ஸ்களை அணிய கூடாது: மருத்துவர்கள் எச்சரிக்கை

3 weeks ago 4

சென்னை: தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்கும்போது கான்டாக்ட் லென்ஸ்களை அணியும் நபர்கள் இருமடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளியன்று பட்டாசுகளை கையாளும்போது கூடுதல் கவனமும், எச்சரிக்கையும் கொண்டு இருக்க வேண்டும். பட்டாசுகள், வெடிகளை வெடிக்கும்போது ஏற்படும் பெரும்பாலான காயங்கள், கண்கள் மீது தீவிர காயங்களை விளைவிப்பதாகவே இருக்கின்றன. குறிப்பாக மத்தாப்புகளாலும் மற்றும் வெடியுடன் கூடிய ‘சங்கு’ சக்கரங்களாலும் அதிக அளவில் கண்களில் பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் டாக்டர். எஸ். சௌந்தரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தீபாவளியன்று மத்தாப்புகளாலும் மற்றும் வெடியுடன் கூடிய ‘சங்கு’ சக்கரங்களாலும் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். வெடிகளில் கலக்கப்படும் வெடிமருந்திலுள்ள வேதிப்பொருட்களினால் ரசாயன காயங்கள் ஏற்படுகின்றன. கண்ணாடியையே உருக்கிவிடும் அளவிற்கு அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் மத்தாப்புகளால் சருமத்தில் மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்படும். கண்களுக்கு ஏற்படும் காயத்தின் தன்மை, லேசான எரிச்சல் மற்றும் கண்விழிப்படலத்தில் சிராய்ப்புகள் என்பவற்றிலிருந்து, கருவிழியில் சிக்கல்கள் மற்றும் பார்வைத்திறன் இழக்கும் அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

மேலும் கான்டாக்ட் லென்ஸ்கள் நீண்ட நேரத்திற்கு நேரடி வெப்பத்திற்கு வெளிப்படுத்தப்படுமானால், அதனால் கண்களுக்கு எரிச்சல் ஏற்படும். எனவே, வெடிகள், பட்டாசுகளை வெடிக்கும்போது கான்டாக்ட் லென்ஸ்களை அணியும் நபர்கள் இருமடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அணியாமல் இருப்பது நல்லது. கண்களில் பெரிய அளவிலான காயங்கள் ஏற்பட்டால் கண்களை தேய்க்கவோ அல்லது கசக்கவோ கூடாது, கண்ணில் அந்நியப்பொருள் இருக்குமானால், கண் இமைகளை நன்கு திறந்த நிலையில் பிடித்துக்கொண்டு, நீரைக்கொண்டு தொடர்ச்சியாக கண்களை அலச வேண்டும். வலி நிவாரணிகள் உட்பட ஓடிசி மருந்துகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது, அதற்கு பதிலாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். எதிர்பாராத விதமாக கண் காயம் ஏற்படுமானால், அத்தகைய நபர்களுக்கு உதவிக்காக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அவசரநிலை சேவைகளை வழங்குகிறோம். அத்தகைய தருணங்களில் 95949 24048 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கும்போது கான்டாக்ட் லென்ஸ்களை அணிய கூடாது: மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article