தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற லட்சக்கணக்கானோர் திரும்பியதால் பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம்: பரனூர் சுங்கச்சாவடி, பெருங்களத்தூர், தாம்பரம், இசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்

2 weeks ago 4

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற லட்சக்கணக்கானோர் சென்னைக்கு நேற்று பஸ், ரயில்களில் படையெடுக்க தொடங்கினர். இதனால் பஸ், ரயில்களில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. கார்களிலும் நிறைய பேர் திரும்பியதால் நேற்று பரனூர் சுங்கச்சாவடியிலும் பெருங்களத்தூர், தாம்பரம், ஓஎம்ஆர் சாலை, இசிஆர் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இன்று காலையும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்தை சரிசெய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை கடந்த 31ம் தேதி (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் தீபாவளிக்கு முந்தைய நாளான புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு மதியத்துக்கு மேல் அரை நாள் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முடித்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில் தீபாவளி மறுநாளான வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியும், தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.

ரயில், பஸ்கள், கார்கள் என 15 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் தீபாவளிக்கு முந்தைய நாளான புதன்கிழமை அன்று சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. எப்படியாவது சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால், சென்னையில் இருந்து புறப்பட்ட அனைத்து ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் கூட்டம் வழக்கத்தை விட நிரம்பி வழிந்தது.

தீபாவளி பண்டிகை முடிவடைந்ததை தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு நேற்று முன்தினம் முதல் திரும்ப தொடங்கினர். நேற்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கினர். இதனால், இந்த மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் ஏற்கனவே ஹவுஸ்புல்லாகியிருந்தது. இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்தது.

எப்படியாவது சென்னைக்கு செல்ல வேண்டும், அவ்வாறு சென்றால்தான் இன்று தங்களது பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க முடியும் என்று நேற்று மாலை முதல் இரவு முதல் இயக்கப்பட்ட ரயில்களில் மக்கள் சென்னைக்கு வர திட்டமிட்டுள்ளனர். இதனால், அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டம் நிரம்பி வழிந்ததால் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் பஸ்களில் பயணம் செய்ய திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் அரசு, தனியார் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

இதற்காக தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 1735 பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும் பலர் சென்னைக்கு திரும்பினர். இந்நிலையில், தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வாகனங்கள் படையெடுத்ததால், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாமல் அனுப்பி வைத்து, போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். எனினும், அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் உரிய இடத்துக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை அதிக அளவிலானோர் கார்களில் சென்னைக்கு வரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனால் வாகனங்களில் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வாகனங்கள் பெருக்கெடுத்து வந்தால் சுங்கச்சாவடிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரனூர் சுங்கச்சாவடியில் வெளியூர்களில் இருந்து சென்னை வரும் வாகனங்களுக்காக சுங்க கட்டணம் வசூலிக்க கூடுதலாக 2 கவுன்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. வெளியூர்களில் இருந்து அதிகளவு வாகனங்கள் சென்னை திரும்புவதால் ஆம்னி பஸ்கள், தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நேற்று ஏற்பட்டது.

அதேபோல வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் பிரதான சாலைகளான ஓஎம்ஆர் சாலை, இசிஆர் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி கடந்து வந்தன. இதனால் இன்று காலை வரை செங்கல்பட்டு மாவட்ட மற்றும் சென்னை மாநகர போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

* வரிசைகட்டி நின்ற வாகனங்கள்
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான கார்களில் பொதுமக்கள் சென்னைக்கு வந்தனர். அதேபோல சிறப்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளிலும் பொதுமக்கள் சென்னை திரும்பினர். இதில் நேற்று மாலை பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் ஜிஎஸ்டி சாலையில் அதிகளவில் வாகனங்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக எறும்பு போல் ஊர்ந்து சென்றது.

போக்குவரத்து நெரிசலை சரி செய்ய ஆங்காங்கே போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். இருப்பினும் அதிக அளவிலான வாகனங்கள் வருகையால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலானோர் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள் மூலம் சென்றனர். இதனால் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஏராளமான மக்கள் கூட்டம் காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து நெரிசல் ஏற்படாத வண்ணம் வாகனங்களை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தனர். ஆனாலும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

The post தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற லட்சக்கணக்கானோர் திரும்பியதால் பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம்: பரனூர் சுங்கச்சாவடி, பெருங்களத்தூர், தாம்பரம், இசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Read Entire Article