சென்னை,
தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் புத்தாடைகளை அணிந்து, தங்கள் குடும்பத்தினருடன் பட்டாசுகளை வெடித்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் தங்கி பணிபுரியும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள், 2 நாட்களுக்கு முன்பாகவே தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கி விட்டனர். இதனால் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் கடந்த ஓரிரு நாட்களாக கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் இறைச்சி, மீன் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வேளச்சேரி விஜய நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வெளியூர்வாசிகள், தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றதால், மீன், இறைச்சி கடைகள் இன்று வெறிச்சோடின. தொடர் விடுமுறை காரணமாக மக்கள் கூட்டம் இல்லாததால் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு வியாபாரம் மந்தமாகி விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.