தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்கப்படும் இனிப்புகளில் குறைகள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை

3 weeks ago 3

திருவள்ளூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்கப்படும் இனிப்பு, காரவகை பலகாரங்களில் குறைகள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் ஆணையர் அறிவுறுத்தலின் பேரிலும், திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரிலும், இனிப்பு பலகாரங்கள் மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று திருவள்ளூரில் நடைபெற்றது. இந்த கூட்டதிற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருவள்ளூர் சிவசங்கரன், எல்லாபுரம் வர்தினி, கும்மிடிப்பூண்டி மகேஸ்வரி, கடம்பத்தூர் புஷ்பா நிர்மலா பாக்கியம், திருத்தணி துர்கா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் பேசுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரவகைள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்தபந்தங்களுக்கு இதனை அன்பளிப்பாக அளித்து மகிழ்வதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் காரவகைகளை தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் இனிப்பு காரவகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான முலப்பொருட்களைக் கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தரமான முறையில் கலப்படமில்லாது தயாரித்து பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. மேலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் பயன்படுத்தி இனிப்பு மற்றும் காரவகைகள தயாரிக்க கூடாது. இதனை ஆர்யுசிஓ திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்கவேண்டும். உணவுப் பொருட்களை நியூஸ் பேப்பரில் மடித்து தரக்கூடாது. இவ்வாறு அறிவுறுத்தினார்.

மேலும் இனிப்பு, காரவகை பலகாரங்களில் ஏதேனும் குறைகள் காணப்பட்டாலோ, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக இருந்தாலோ அத்தகைய உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த கூட்டத்தில் பேரம்பாக்கம் ஏவிஏ ஓட்டல் உரிமையாளர் ஏவிஏ.ராஜ்குமார், திருவள்ளூர் பெரம்பூர் சீனிவாசா மேலாளர்கள் அருண்குமார், கார்த்திக், நித்திய அமிர்தம் தர கட்டுப்பாட்டு அலுவலர் சசிகுமார், கங்கா ஸ்வீட்ஸ் மேலாளர் ராதாகிருஷ்ணன், நெல்லை ஸ்வீட்ஸ் உரிமையாளர் ராஜசேகர், கடம்பத்தூர், அய்யனார் ஸ்வீட்ஸ் உரிமையாளர் பெருமாள், நந்தினி ஸ்வீட்ஸ் உரிமையாளர் சந்திரசேகர் உட்பட இனிப்பு பலகாரங்கள், காரவகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.

* குறியீடுகள் அவசியம்
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியனவற்றை அவசியம் குறிப்பிடவேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்கப்படும் இனிப்புகளில் குறைகள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article