சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்.31ம் தேதி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டமானது போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில்; அக்.28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 அரசு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 3 நாட்கள் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் சுமார் 5.83 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 2 முதல் 4ம் தேதி வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 9,441 பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். ஆலோசனைக்குப் பின்னர் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை..!! appeared first on Dinakaran.