தீபாவளி பண்டிகைக்கு 2வது நாளாக இன்று 5,347 சிறப்பு பஸ்கள் இயக்கம்: கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

3 weeks ago 4

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல இரண்டவாது நாளாக 5,347 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் செல்வது வழக்கம். அதன்படி, மக்கள் சென்னையில் இருந்து புறப்பட தயாராகி வருகின்றனர். இதற்காக பலர் ரயில், பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். வரும் 31ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 14,086 பேருந்துகள் போக்குவரத்து துறை தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்றைய தினம் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக சென்னையில் இருந்து 700 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 பஸ்களும் இயக்கப்பட்டன. காலை முதல் இரவு வரை 3 பேருந்து நிலையங்களுக்கு மக்கள் வந்த வண்ணமாக இருந்தன.

போக்குவரத்து துறை சார்பில் பயணிகளுக்கு உதவும் வகையில் உதவி மையங்களும், கட்டுப்பாட்டு அறைகளும், டிக்கெட் முன்பதிவு மையம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், போலீசார் தரப்பில் பேருந்து நிலையம் வரக்கூடிய பயணிகளிடம் வழிப்பறி, செல்போன் பறிப்பு, திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் நிகழாத வண்ணம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதேபோல், ஒலிப்பெருக்கி மூலமாகவும் தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. நேற்று மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவுசெய்து பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை தினத்தையொட்டி ஏராளமான மக்கள் சொந்த ஊர் சென்றதால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன. அதேபோல், கார் மற்றும் இதர வாகனத்தில் வந்தவர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக சென்றனர். இந்நிலையில் 2வது நாளாக சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் தினசரி இயங்கும் 2,092 பேருந்துகள், சிறப்பு பேருந்து 2,125 மற்றும் பிற பகுதிகளில் இருந்து 1,130 பேருந்துகள் என ஒட்டுமொத்தமாக 5,347 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, இன்று 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்யக்கூடும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

* பேருந்தில் செல்வோர் முன்பதிவு செய்ய வேண்டுகோள்
விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28, 29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழ்நாடு அரசால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த 3 நாட்களும் சென்னையின் தினசரி பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளும் என 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த 3 நாட்களுக்கு 4,29,870 இருக்கைகள் முன்பதிவில் உள்ளன. அதேபோல், 1,31,828 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஒட்டுமொத்தமாக 30.67 சதவீதமாக உள்ளன. எனவே, பயணிகள் நாளை (30ம் தேதி) கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, முன் கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகைக்கு 2வது நாளாக இன்று 5,347 சிறப்பு பஸ்கள் இயக்கம்: கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article