சென்னை,
பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து மட்டும் 10,500 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக வருகிற 19-ம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக்குப் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.5 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான பணிகளை திட்டமிட இருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், TNPSC என்ற மொபைல் ஆப் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போது தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.