திறமையே வெற்றியின் மூலதனம்

1 week ago 6

திறமைசாலிகள் தோற்பதில்லை. அவர்களைப் பிறர் தோற்கடிக்க முடிவதில்லை. அவர் ஒரு தமிழ் புலவர், அரசரிடம் சென்று அவரை புகழ்ந்து பாடினால் அதைக் கேட்டு மகிழ்ந்து அரசன் தரும் பொருளைக் கொண்டு பிழைக்க கூடியவர். அவர் ஒரு நாள் அரசரை பார்க்கப் போனார்.ஆனால் அந்த அரசன் புலவரை புலவராகப் பார்க்காமல், பிச்சைக்காரனைப்போல எண்ணிவிட்டார்.புலமையைக் கண்டறிந்து பரிசு தராமல், காவலாளியிடம் சிறிய பரிசைக் கொடுத்து அனுப்பி விட்டார். கிடைத்தது போதும் என்று வாங்கும் இரவலன் இயல்பு இல்லாத புலவன் கொதித்துப் போனார். ‘‘காணாது ஈந்த பரிசலைப் பெறும் வாணிப பரிசிலைப் பெறும் வாணிபப் பரிசிலேன் நான் அல்லன்” என்று கோபித்துக் கொண்டு புறப்பட்டு போனார். போகிற போக்கில் புலவர், உலகத்தை பற்றி சொன்ன ஒரு சொல் அற்புதம்… அபாரம்… அருமையோ அருமை.உலகம் என்ன அவ்வளவு சிறியதா? பெரியது. என்னை காப்பாற்ற இவன் ஒருவன் தானா? பலர் இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் ‘‘பேணுநர் பலரே பெரிதே உலகம்” என்று சிலிர்த்துக் கொண்டார். இந்த நம்பிக்கை உங்களுக்கு உண்டா? இருக்கிற இந்த சின்ன வேலையையும் விட்டு விட்டால் நாளை சாப்பாட்டுக்கு நான் என்ன செய்வது என்று கவலையோடு சின்ன வேலையிலேயே பலர் காலத்தை போக்கு வது புத்திசாலித்தனமா? இன்றைக்குப் பெரும் புகழோடும், உயர்வான இடத்தில் வாழும் பலர் துணிந்து முடிவெடுத்ததால்தான் வெற்றியாளராக, சாதனையாளராக மலர்ந்து நிற்கிறார்கள்.

உங்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன. ஆனால் அவற்றை நீங்கள் வெளிக்கொணர முயற்சிகள் செய்வதில்லை.சிலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஏதாவது ஒரு வழியில் முயன்றுகொண்டே இருப்பார்கள்.ஆனால், அவை ஒன்றும் அவ்வளவாக மற்றவர்களிடம் சென்று சேராது. ஏனெனில் அவர்கள் தங்களது திறமைகளை அமைதியாக, தம்மிடமே வைத்துக் கொள்வார்கள். தங்களது திறமையை வெளிப்படுத்த தயங்குவார்கள். இதற்கு அவர்களின் தாழ்வு மனப்பான்மையே காரணம்.உங்களுக்கு நன்றாக தெரிந்த செய்திதான் இது. குயில்கள் தங்களுக்கு என்று சொந்தமாக கூடு கட்டிக் கொள்வது கிடையாது. காக்கையின் கூட்டில்தான் குயில்கள் தங்கள் முட்டைகளை இடுவது வழக்கம். ஆனால், முட்டையிலிருந்து வெளியே வந்ததும் குயில் குஞ்சு தனது குயில்கள் இனத்தோடு சென்று சேர்ந்து விடும்.ஒரு காக்கை கூடு இருக்கின்றது. அதில் குயில் வந்து முட்டை இட்டுவிட்டுப்போய் விடுகிறது. காக்கை, குயிலின் முட்டையை தனது முட்டை என்றே நினைத்துக் கொண்டு அடைகாக்கின்றது. குயில் குஞ்சு முட்டையிலிருந்து பொரிந்து வெளியில் வந்து விடுகிறது.தன் இனத்தோடு சேர வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் அது வளர்கிறது.உண்மையிலேயே அது குயிலாக இருந்த போதிலும், அதற்கு கூவத் தெரியவில்லை.தன்னை அது உண்மையான காகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது.

கூவ முடிந்தும் அது கூவ முயற்சி செய்யாமல் இருக்கிறது. ஏனென்றால், அது வளர்ந்த சூழநிலை அப்படி. அதன் திறமை என்னவென்று அதற்குத் தெரியவில்லை. இந்த குயிலை போன்றுதான் பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையும் உள்ளது. குயிலாக பிறந்தும் குடும்ப வாழ்க்கையில் தங்கள் திறமைகளை தொலைத்து விட்டு காக்கையாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.ஒரு பெண் சிறந்த இல்லத்தரசியாக இருந்துகொண்டு தன் திறமைகளை வெளிப்படுத்தி இந்த சமூகத்தில் சாதிக்க முடியாதா? ஆணுக்கு நிகர் பெண் என்று கல்வி, வேலை வாய்ப்பு, பதவி போன்றவற்றில் முன்னேறி வர முடியாதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் ‘‘முடியும்” என்கிறார் ஒரு சாதனைப் பெண்மணி. ஒரு சிறந்த இல்லத்தரசியாகவும் இருந்துகொண்டு தன்னுடைய பன்முகத்திறமையால் ஒரு வெற்றியாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர்தான் சென்னையைச் சேர்ந்த ரிஹானா கான்.இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஹோம் சயின்ஸ் பட்டயப் படிப்பை படித்தார்.இவருடைய கணவர் சுபேர் கான் மூட நீக்கியலில் முன்னணி மருத்துவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் ராயப்பேட்டையில் முட நீக்கியல் மருத்துவமனை தொடங்கி, தனது கணவருக்கு உதவியாக மருத்துவமனை நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து முடநீக்கியலில் முக்கிய சிகிச்சை மையமாக மருத்துவமனையை மாற்றி உள்ளார்.

மருத்துவமனை நிர்வாகத்தில் ஒரு புதுமையை கையாண்டார். முதலில் தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனை வாசனையே இருக்கக் கூடாது. நோயாளிகளுக்கு தங்களது வீட்டில் தங்கி இருக்கும் உணர்வைத் தர வேண்டும் என்பதற்காக ‘ஹவுஸ்கீப்பிங்’கில் மிகவும் பொறுப்பாய் செயல்பட்டு சுத்தத்தை பேணி பாதுகாத்தார்.பல்வேறு உடல் உபாதைகளுடன் உடலும், மனமும் தளர்ந்து வரும் நோயாளிகளுக்கு நோயிலிருந்து விடுபடுவதற்கான ஊக்கத்தையும், நம்பிக்கை வார்த்தைகளையும் தரவேண்டும் என்பதையே தனது நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றார்.மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு திறன் மிகுந்த ஊழியர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதை கருத்தில்கொண்டு துணை மருத்துவ கல்வி நிறுவனத்தையும் நடத்தி அதில் இயக்குனராகவும் இருந்து வருகிறார். இந்த கல்வி நிறுவனத்தில் நன்றாக படிக்கக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்கள் வாழ்வில் மேம்பட உதவி வருகிறார்.

ரிஹானா கானின் தந்தை நோட்டுப் புத்தக தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது மகளுக்கு சமூக அக்கறையை ஏற்படுத்தி, நமக்கு எல்லாம் கொடுத்த சமூகத்துக்கு நாமும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் சிறுவயதிலிருந்தே சொல்லி வளர்த்தார். அதேபோல அவருடைய மாமனார் இரகுமான்கான் அவர்களும் தமிழ் பற்று மற்றும் சமுதாயப்பற்று கொண்டவர். இதனால் இவரை போல அவருடைய கணவரும் சமூக சேவையில் மிகவும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். கணவன், மனைவி இருவரும் ஒருமித்த கருத்துடன் கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த சேவைகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் அறங்காவலராகவும் இருந்து வருகிறார் ரிஹானா கான்.

ஒரு குடும்பத்தின் உயர்வுக்கான, சமூகமாற்றத்திற்கான கருவி கல்வி என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே பின்தங்கிய சமூகம் மற்றும் ஏழை எளிய பின்னணியை சார்ந்த மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, பாடநூல்கள், உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக உயர்கல்வியில் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிளஸ் 2-வுக்கு பிறகு என்ன படிக்கலாம்? என்று விளக்கும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம். கல்விக்காக அரசு வழங்கும் சலுகைகள்,வேலை வாய்ப்புகளை கல்வியாளர்கள், நிபுணர்கள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைத்து அவர்கள் உயர்கல்வியில் சாதிக்க உதவி வருகிறோம்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள் நடத்தி வருகின்றோம். எங்கள் மருத்துவ முகாம்கள் மூலம், அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் முதல் அத்தியாவசிய சிகிச்சை வரை அளிக்கின்றோம். மனநல ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். மேலும் அவசியமானவர்களுக்கு மருத்துவமனையில் அறுவைசிகிச்சையும் செய்கின்றோம். கொரோனா காலத்தில், ஆம்புலன்ஸ் உதவியுடன் தீவிர களப்
பணியாற்றி பல உயிர்களை காப்பாற்றியுள்ளோம் என்கிறார் ரிஹானா கான்.பெண்களுக்கு சொந்த வீட்டில் ஆதரவில்லை என்றால் அவர்களால் வெளியில் வந்து செயல்பட முடியாது.அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. எனது மாமனார் இரகுமான் கான் எனது சமூக செயல்பாடுகளை எப்போதும் ஊக்கப்படுத்துவார், உற்சாகமூட்டுவார். அவருடைய வார்த்தைகள் எப்போதும் என்னை வழிநடத்துகின்றன. எனது தந்தை அப்பாஸிடம் இருந்து நேர்மை, நிர்வாகத்திறனையும், அம்மா ஷாஜிதாவிடம் இருந்து பொறுமை, தன்னம்பிக்கையும் நான் கற்றுக் கொண்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக எனது கணவர் என்னை என்போக்கில் இயங்க விட்டிருக்கிறார். என்னுடைய முதுகெலும்பு அவர்தான். ஒரு பெண் இந்த சமூகத்தில் வெற்றி பெறுகிறார் என்றால் அதற்கு ஆண்களின் தியாகம்தான் காரணம். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது போல, ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு ஆண் இருப்பார். எனது வெற்றிக்கு பின்னால் எனது கணவர் இருக்கிறார் என்கிறார் ரிஹானா கான்.

மருத்துவமனை நிர்வாகி, மருந்தக உரிமையாளர், கல்வி நிறுவனத்தின் இயக்குனர், அறக்கட்டளை அறங்காவலர் என்று பன்முகத் திறமையுடன் திகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ரிஹானா கான் இன்றைய பெண்களுக்கு சொல்வது என்னவென்றால் உங்கள் திறமைகளை சமையல் அறையில் தொலைத்து விடாதீர்கள். ஒவ்வொரு பெண்களுக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். அதைப் பட்டை தீட்டி ஜொலிக்க செய்யுங்கள்.நீங்கள் எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த துறையில் துணிந்து இறங்கி விடுங்கள். துணிந்து இறங்கி விட்டாலே பாதி வெற்றிதான். மேலும் உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்களாலும் சாதிக்க முடியும் என்கிறார் ரிஹானா கான்.பெண்கள் முன்னேற்றத்தின் சிகரங்களைத் தொடுவதற்கு உழைப்பின் துணையோடு முயற்சி சிறகுகளை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டும். தங்களிடம் இருக்கும் திறமைகளை மேம்படுத்த வேண்டும். அந்த திறமைகள் தான் வெற்றியின் மூலதனம், திறமைகள் மேம்பட, மேம்பட கூடவே தன்னம்பிக்கையும் மேம்படும். தன்னம்பிக்கையோடு முயற்சிக்கின்ற போது, வெற்றியின்
இலக்குகளை விரைவில் உங்களாலும் தொட்டுவிட முடியும்.

The post திறமையே வெற்றியின் மூலதனம் appeared first on Dinakaran.

Read Entire Article