திரைப்பட விமர்சகருக்கு மிரட்டல் விடுத்து சர்ச்சையில் சிக்கிய இயக்குனர்

2 months ago 16

ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர் சூர்யா - 44 மற்றும் கமலுடன் தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் 7 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ், பனி என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடித்தும் உள்ளார். நாடோடிகள் அபிநயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஜய், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்கள். கேரளாவின் திருச்சூரில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த திரில்லர் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 24ம் தேதி வெளியானது. மலையாளத்தில் உருவான 'பனி', இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் வெளியாக இருக்கிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ. 11 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வணிக ரீதியாக வெற்றிப்படமாகியுள்ளது.

இதற்கிடையே, ஆதர்ஷ் என்பவர் பனி படத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைக் காட்சியைக் குறிப்பிட்டு, 'இதை இப்படி படமாக்கியது சரியான செயல் கிடையாது' என தன் விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதைப் படித்த ஜோஜு ஜார்ஜ், செல்போன் வாயிலாக ஆதர்ஷை அழைத்து, "என் படத்தைப் பற்றி இப்படியெல்லாம் எதற்கு எழுதுகிறாய்? தைரியமிருந்தால் நேரில் வா" எனக் கூறியுள்ளார். ஜோஜு பேசிய ஆடியோவும் வெளியானது. விமர்சகரை ஒருமையில் இப்படியுமா மிரட்டுவார் என பலரும் ஜோஜு ஜார்ஜை கண்டித்தனர்.

இது தொடர்பாக விமர்சகர் ஆதர்ஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "பனி படத்தில் இடம்பெற்றிருந்த பாலியல் வன்கொடுமை காட்சி குறித்து நான் எதிர்மறையாக விமர்சனத்தை வெளியிட்டிருந்தேன். ஒரு திரைப்படத்தில் பாலியல் வன்கொடுமை காட்சியை காட்சிப்படுத்தும்போது, அது பார்வையாளர்களின் அனுதாபத்தை தூண்டும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், ஜோஜூ ஜார்ஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பெண்களை காட்சிப்பொருளாக சித்தரிக்கும் வகையில் கிட்டத்தட்ட 'பி கிரேடு' படத்துக்கு ஒப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை நான் சொன்னதற்காக ஜோஜூ ஜார்ஜ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோது' என மிரட்டல் விடுத்தார். நான் இதற்கெல்லாம் பயப்படுபவனில்லை. அவர் இது போல மற்றவர்களுக்கு மிரட்டல் விடுக்க கூடாது என்பதற்காக தான் இந்த வீடியோவை வெளியிட்டேன்" என தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு முகநூலில் நேரலையில் வந்த ஜோஜு ஜார்ஜ், "நான் அந்த விமர்சகரிடம் பேசியது உண்மைதான். ஆனால், அந்த நபர் செய்ததும் சரி கிடையாது. ஒரு திரைப்படத்தை எடுப்பது எவ்வளவு கடினமானது என பலருக்கும் தெரியாது. இப்படத்திற்காக, இரண்டு ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். நான் செல்வந்தன் இல்லை. ஆனால், இப்படத்திற்கு தயாரிப்பாளராக பெரிதாக முதலீடு செய்திருக்கிறேன். விமர்சனம் என்கிற பெயரில் எங்கெல்லாம் இப்படத்தைப் பற்றி பேசுகிறார்களோ அங்கெல்லாம் இந்த நபர் சென்று பனி படத்தைப் பார்க்காதீர்கள் என பேசி வந்தார். மேலும், அவருடைய விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பரப்பி என் படத்தை திட்டமிட்டே அழிக்க நினைத்தார்.. ஒரு திரைப்படத்திற்குப் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது தெரியுமா? இப்படி திட்டமிட்டே ஒரு படத்தை காலி செய்வது எந்த விதத்தில் சரி? உண்மையில், படம் பிடிக்கவில்லை என்றால் ஏன் என நியாயமான விமர்சனத்தை முன்வைக்கலாம். பனி படத்தில் ஒன்றுமில்லை என்றால் என் திறமை அவ்வளவுதான் என்றே அர்த்தம். நான் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். இயக்குநராக முதல் படம் என்றாலும் நியாயமான உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். . அதற்கான பலனாக படமும் வணிக ரீதியான வரவேற்பைப் பெற்றிருப்பது எனக்கு பெரிய நிம்மதியைத் தருகிறது. ஆனால், இந்த விமர்சகர் ஒவ்வொரு இடத்திலும் பனியை மட்டம் தட்டுவதும், நியாயமற்ற முறையில் விமர்சிப்பதும் எனக்கு சரியாகப்படவில்லை. அதனால்தான் அவரை அழைத்துக் கேட்டேன். நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்து மேலே வந்தவன் என்பதால் நான் பேசும் பாணியிலேயே அதற்கான தடம் இருக்கும். அதையும் நீங்கள் கருத்தில் எடுக்க வேண்டும். என்னை ஆதரித்தவர்களுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.



Read Entire Article