திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரை கடற்கரைகளில் ‘ஆலிவ் ரிட்லி’ ஆமைகள் இறப்பு அதிகரிப்பு: நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கும் அவலம்

13 hours ago 1

சென்னை: திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரையிலான கடற்கரைகளில் ஆலிவ் ரிட்லி உள்ளிட்ட 4 வகை ஆமைகள் நூற்றுக்கணக்கில் இறந்து ஒதுங்கி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை கடல் பரப்பில் வசிக்கும் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இதன் காரணமாக இந்த மாதங்களில் கடலின் ஆழத்தில் வசிக்கும் ஆமைகள் முட்டைகளை இடுவதற்காக கடற்கரைக்கு வந்து குழிதோண்டி முட்டைகளை இட்டுவிட்டு கடலுக்கு திரும்புகின்றன.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாக இவ்வாறு கரைக்கு வரும் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் படகுகளில் மோதியும், வலைகளில் சிக்கியும் உயிரிழப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அதற்கு, ஏற்றாற்போல் கடந்த ஒரு மாதமாக தினமும் கிழக்கு கடற்கரையோரம் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கடற்கரையில் ஒதுங்குகின்றன. இவற்றை பார்க்கும் பொதுமக்கள் அவையும் ஒரு மீன் வகைதான் என நினைத்து சாதாரணமாக கடந்து சென்று விடுகின்றனர். ஆனால், ஆமைகள் உயிர்ச்சூழல் சங்கிலியில் ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றன என்பதை பலரும் உணர்வதில்லை. தமிழ்நாடு வனத்துறை சார்பில், இந்த ஆமைகளை இறப்பை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை முழுமையாக வெற்றி பெறவில்லை என்பது தற்போது நடந்து வரும் அதிக அளவிலான ஆமைகள் இறப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

அந்த வகையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், நெம்மேலி, பட்டிபுலம், மாமல்லபுரம் ஆகிய கடற்கரை பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. இவற்றை பார்த்த சமூக ஆர்வலர்களும், கடல் ஆமைகள் பாதுகாப்பு குழுவினரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உள்ளூர் மக்களின் உதவியுடன் அவற்றை கடற்கரை மணலில் புதைத்தனர்.

கடந்த சில வாரங்களில் மட்டும் தொடர்ச்சியாக முட்டையிட வரும் பெண் ஆமைகள் இறப்பது கடல் வாழ் உயிரின ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கோவளம் கடற்கரையில் 25க்கும் மேற்பட்ட பெரிய ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. மெரினா, திருவொற்றியூர், காசிமேடு பகுதி கடற்கரைகளிலும் ஏராளமான ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன. இந்தாண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குள் சுமார் 350க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்துள்ளன. இது வேதனை தரும் தகவல். ஆமைகள் எதன் காரணமாக இப்படி கொத்து கொத்தாக இறந்து வருகின்றன என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும. இறந்த ஆமைகளை பரிசோதனை செய்து பின்னரே புதைக்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற அபூர்வ வகை ஆமைகள் இறப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்’’ என்றனர்.

மீனவர்கள் கூறுகையில், ‘‘காலநிலை மாறி வருவதால் போதுமான மீன்கள் கிடைக்காமல் நாங்கள் தவித்து வருகிறோம். நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க செல்லும்போது கைவலைகளில் ஆமைகள் சிக்கினால் உடனே வலையை அறுத்து மீண்டும் கடலில் விடுவோம். ஆமைகளை நாங்கள் ‘குட்டியம்மா’ என்று தெய்வமாக வழிபடுவோம்.சென்னை கடற்கரையில் ஏராளமான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. இதற்கு மீனவர்கள்தான் என்று கூறுகிறார்கள். இது, மீனவர்கள் ஆமைகள் மீது வைத்திருக்கும் மரியாதையை அவமதிக்கும் செயல். அசுத்தமான இடங்களாலும், பாதுகாப்பு சூழல் இல்லாத இடங்களாலும் மட்டுமே ஆமைகள் முட்டை போடாமல் மீண்டும் கடலுக்கு சென்று விடுகின்றன. சென்னையில் பெரும்பாலான கடற்கரைகள் அசுத்தமாக, குப்பை கழிவுகள் நிறைந்தும், சாக்கடை கலந்தும் காணப்படுகிறது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.

The post திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரை கடற்கரைகளில் ‘ஆலிவ் ரிட்லி’ ஆமைகள் இறப்பு அதிகரிப்பு: நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கும் அவலம் appeared first on Dinakaran.

Read Entire Article