திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை : மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பிப்பு!!

2 weeks ago 3

திருவொற்றியூர் : சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் ஏற்பட்ட வாயு கசிவு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுசூழல் துறை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 25ம் தேதி 40க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென மயக்கம் அடைந்தனர். வாயு கசிவு காரணமாக மாணவிகள் மயக்கம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 10 நாள் விடுமுறைக்கு பிறகு பள்ளி நேற்று திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் மாணவிகள் 6 பேர் மயக்கம் அடைந்தனர். அதை தொடர்ந்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் வாயுக் கசிவு குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடமாடும் இயந்திரம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், காற்றின் தரம் குறித்து பள்ளியில் 2வது நாளாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பள்ளியில் 3 நாட்கள் ஆய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. காற்றின் தரம் கண்காணிக்கும் வாகனத்தை பள்ளியில் நிறுத்தி 3 நாள் ஆய்வு செய்ய மாசுக் கட்டுப்பாடு வாரியம் முடிவு எடுத்துள்ளது.

இதனிடையே வாயு கசிவு தொடர்பாக கடந்த மாதம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுசூழல் துறை செயலாளரிடம் சமர்ப்பித்தது. அதில் பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் கடைசியாக ஆகஸ்ட் மாதம் செயல்முறை வகுப்புகள் நடைபெற்றுள்ளன என்றும் செயல்முறை வகுப்பிற்கு பிறகு பயன்படுத்தப்பட்ட ரசாயன பாட்டில்கள் சுத்தம் செய்யப்படாமல் வைக்கப்பட்டு இருந்தன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், “அக்.24 பகல் 12 மணி முதல் அக்.25 பகல் 12 மணி வரை அமோனியா வாயு அளவில் மீறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.ஒரு சதுர அடி பரப்பளவில் 400 மைக்ரோகிராம் அமோனியா இருக்கலாம் என்ற அளவை தாண்டவில்லை.அன்றைய தினம் ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் 0.4 முதல் 9.5 மைக்ரோகிராம் அமோனியா வரை மட்டுமே இருந்தது.ஆயினும் வாயு கசிவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை,” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை : மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article