திருவையாறில் குறுகலான சாலையில் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

4 hours ago 2

* பைபாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

திருவையாறு : திருவையாறில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் தவிப்பதால் போக்குவரத்து காவலர்களை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில், இசைமேதை சத்குரு ஸ்ரீதியாகராஜர் நினைவிடம், பேரூராட்சி, ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகம், அரசு முழுநேர கிளை நூலகம், ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள், தனியார் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு மருத்துவமனை, வட்டார கல்வி அலுவலகம், வட்டார வளமையம், காவல்நிலையம், தீயணைப்பு நிலையம், ஒருங்கிணைத்த வேளாண் விரிவாக்க மையம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புடன் திருவையாறு பேரூராட்சி இயங்கிவருகிறது.

தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது விரைவில் நகராட்சியாக நடைமுறைப்படுத்தும் சூழ்நிலை உள்ளது. திருவையாறு பஸ் ஸ்டாண்டிலிருந்து அரியலூர், கும்பகோணம் சாலையும், திருக்காட்டுப்பள்ளி சாலைகள் பிரிந்து செல்கிறது.

இந்த குறுகலான பிரிவு சாலைகளில்தான் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.நாள்தோறும் இந்த சாலையில் நூற்றுக்கணக்கான பைக்குகள், பஸ்கள், கார்கள், மணல் ஏற்றி செல்லும் லாரிகள், கனரக வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வருகின்றன.

வர்த்தக நிறுவனங்களுக்கு சரக்கு இறக்கும் வாகனங்களாலும், கனரக வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி தவிப்பதும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் பெரிதும் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

திருவையாறில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் சட்டம் ஒழுங்கு போலீசாரே போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து சீரமைப்பதில் போலீசார் அக்கறையோடு செயல்படுவதில்லை என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் திருவையாறு, திருக் காட்டுப்பள்ளி, கும்பகோணம் சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் தஞ்சை, கல்லணை, அரியலூர், கும்பகோணம் மார்க்கத்திலிருந்து அதிகமான பஸ் போக்குவரத்து மட்டுமல்லாது கனரக வாகனங்கள் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது.

இவை அனைத்தும் தெற்கு வீதி ஓடத்துறை தெரு சாலை வழியாக சென்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகரித்த போதிலும் சாலைகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல எந்த மாற்றமும் இல்லை. வர்த்தக நிறுவனங்கள் அதிகமாகியுள்ளதாலும், வாகன போக்குவரத்தும் அதிகமாகியுள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து போலீசார் இல்லாததால் பொதுமக்கள் வாகனங்களை எங்கு வேண்டுமானாலும் நிறுத்திவிட்டு செல்லலாம் என்ற நிலை உள்ளது. இதனால் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருவையாறில் போக்குவரத்து நெரிசலைதவிர்க்க தனி போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் அடிக்கடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலையில் இருக்கும் வாகனங்களை எடுக்க எச்சரிக்கை செய்ய வேண்டும்.

திருவையாறில் போக்குவரத்து நெரிசலை முழுவதுமாக குறைக்க ரூ.197 கோடியில் அரசூர் -விளாங்குடி பைபாஸ் சாலை திட்ட பணிகளை விரைந்து முடித்து திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவையாறில் குறுகலான சாலையில் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article