பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 1,263 வீடுகளுக்கு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் விடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து ஏராளமான வீடுகள் மற்றும் கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதன் காரணமாக ஏரியின் பரப்பளவு 169 ஏக்கரில் இருந்து 112 ஏக்கராக குறைந்து விட்டது. இந்த ஏரி பகுதியில் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், ஏற்கனவே ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றவும் அரசு முடிவு செய்தது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஆற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் அதிகாரிகள் முதல்கட்டமாக கடந்த மாதம் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகள், கட்டுமானங்கள் என மொத்தம் 27 வீடுகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடியிருப்புகளை இடிக்க கூடாது, அப்படி அகற்றும் பட்சத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும், குழந்தைகளுடன் சென்று அப்பகுதி மக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். வீடுகளை அகற்றக்கூடாது என்று உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, பூந்தமல்லி வருவாய்த்துறையினர் கோலடி ஏரியில் உள்ள குடியிருப்புகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அங்கு 1,263 வீடுகள் மற்றும் கட்டுமானங்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்தது. உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் கோலடி ஏரியில் ஆக்கிரமித்த 1,263 வீடுகளுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கினர். அதில், கோலடி ஏரியை ஆக்கிரமித்தவர்கள் வரும் 21 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் துறை சார்பில் ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு, அதற்குண்டான செலவுத்தொகை தங்கள் மீது விதிக்கப்படும். இது குறித்து மேல்முறையீடு இருந்தால், பூந்தமல்லி வட்டாட்சியரை அணுகலாம் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
The post திருவேற்காடு நகராட்சியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டிய 1,263 வீடுகளுக்கு நோட்டீஸ்: நீர்வளத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.