திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்திலிருந்து காரைக்கால் செல்லும் புதிய ரயில்பாதை பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக திருவாரூரில் இருந்து ஜல்லி கற்கள் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று காலை திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து பேரளம் காரைக்கால் தண்டவாளம் அமைக்கும் பணிக்காக ஜல்லி கற்கள் ஏற்றப்பட்டு திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயில் புறப்பட்டது. 12 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் எஞ்சின் பேட்டி தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.
இதையடுத்து சிறிது தூரம் ஜல்லி கற்களில் சறுக்கி கொண்டு சென்ற சரக்கு ரயில் தானாகவே நின்றது. இதையடுத்து ரயில் ஓட்டுநர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரயிலின் எஞ்சின் பெட்டியை விடுத்து, மீதம் உள்ள பெட்டிகளை மாற்று எஞ்சின் மூலம் அப்புறப்படுத்தினர்.
மேலும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய எஞ்சின் பெட்டியை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் இருந்து சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
The post திருவாரூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து! appeared first on Dinakaran.