சென்னை: டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட விபத்து குறித்து உயர் நிலை விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ‘இது சாதாரண தீ விபத்து அல்ல; டீசல் ரசாயனம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்’ எனவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “திருவள்ளூர் அருகே பெரியகுப்பம், வரதராஜன் நகர் பகுதியில் டேங்கர் ரெயிலில் டீசல் டேங்க் வெடித்து, தீ பரவியதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளன. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடியும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என செய்திகள் வருகின்றன.
உடனடியாக மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படைகளை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக, பாதுகாப்புடன் வெளியேற்ற வேண்டும் எனவும், அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்திடவும் அரசை வலியுறுத்துகிறேன்.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்.
இது சாதாரண தீ விபத்து அல்ல; டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
The post திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட விபத்து குறித்து உயர் நிலை விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.