திருவள்ளூரில் பரபரப்பு ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

2 months ago 9

திருவள்ளூர், நவ. 15: புல்லரம்பாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை திருவள்ளூர் தாசில்தார், டிஸ்பி தலைமையில் கொட்டும் மழையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்ற முயற்சியில் ஈடுபட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமம் அண்ணா தெருவில் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீசந்தன கோபால கிருஷ்ண ஸ்ரீசந்தான விநாயகர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் அருகில் வனிதா ஸ்ரீதர் என்பவர் கட்டியிடிருந்த வீட்டின் கழிவறையை அகற்ற பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் இடித்து அகற்றப்பட்டது.

இதனால் இதே தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வனிதா ஸ்ரீதர் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து உரிய விளக்கம் கேட்டு கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு விளக்கம் தராததால் மீண்டும் வனிதா ஸ்ரீதர் மேல்முறையீடு செய்தார், இதனையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் புல்லரம்பாக்கம் அண்ணா தெருவில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை இடிக்க வருவாய் கோட்டட்சியர் ஏ.கற்பகம், வட்டாட்சியர் செ.வாசுதேவன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். போலீஸ் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது கொட்டும் மழையில் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் பாதுகாப்புடன் கோயிலின் சுற்றுசுவரை மட்டும் தற்காலிகமாக இடித்து அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை புல்லரம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோயிலை இடிக்க தடை விதிக்க கோரி பொது மக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால் நீதிமன்ற உத்தரவு வரும் வரை காத்திருக்குமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று சுற்றுச்சுவர் மட்டும் இடிக்கப்பட்ட நிலையில் கூடிய விரைவில் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் கோயிலை இடித்து அகற்ற வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

The post திருவள்ளூரில் பரபரப்பு ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Read Entire Article