திருவண்ணாமலையில் வரும் 11ம் தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு 2,650 சிறப்பு பஸ்கள் இயக்கம்

3 weeks ago 5

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 11ம் தேதி இரவு 8.47 மணிக்கு தொடங்கி 12ம் இரவு 10.43 மணிக்கு நிறைவடைகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவைப் போல, சித்ரா பவுர்ணமி கிரிவலமும் பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதாகும். எனவே, சித்ரா பவுர்ணமியன்று சுமார் 30 லட்சம் முதல் 40 லட்சம் பக்தர்கள் வரை கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையொட்டி, கிரிவலத்துக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக மேற்கொள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றை முறையாக செய்ய துறை வாரியாக பணிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் கூடுதலான இடங்களில் குடிநீர் வசதி, முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைத்தல், கோடை காலம் என்பதால் தேவையான இடங்களில் நிழற்பந்தல் அமைத்தல், தரைவிரிப்புகள் ஏற்பாடு செய்தல், கழிப்பறை வசதிகள் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 2,650 சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக, 20 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. மேலும், கூடுதலான சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்ப்டுள்ளது. அதற்கான அட்டவணை ஓரிரு நாட்களில் வௌயாகும் என தெரிகிறது. அன்னதானம் வழங்குவோர் முன்அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையில் சுமார் 5,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 34 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி சுதாகர் ஆகியோர் நேற்று கள ஆய்வு நடத்தினர். கிரிவலப்பாதையில் 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்களுக்கு அருகே அமைக்கப்படும் ஆழ்துளை குழாய்களை கலெக்டர் பார்வையிட்டார். மேலும், அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் குடிநீரை குடித்து பார்த்தார்.

* அண்ணாமலையார் கோயிலில் நாளை முதல் தாராபிஷேகம்
கோடை வெயிலின் அதிகபட்ச பாதிப்புக்குரிய நாட்களாக அமையும் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை (4ம் தேதி) தொடங்குகிறது. வரும் 28ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி தோஷ நிவர்த்திக்கான தாராபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாளை முதல் வரும் 28ம் தேதி வரை தொடர்ந்து தினமும் தாராபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திரத்தின் நிறைவாக 28ம் தேதி சிறப்பு யாகம் நடைபெறும்.

 

The post திருவண்ணாமலையில் வரும் 11ம் தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு 2,650 சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article